காங்கிரஸ் கட்சி ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜனின் ஆதரவை வரவேற்றுள்ளது. அவர் அச்சமில்லாமல் மோடி அரசையும் அதன் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் பேசினார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை இணைந்தார். அரசாங்கத்தின் கொள்கைகளை அடிக்கடி விமர்சிக்கும் ஒரு அச்சமில்லாத பொருளாதார நிபுணரின் ஆதரவை காங்கிரஸ் கொண்டாடிய அதே வேளையில், பா.ஜ.க ரகுராம்ராஜனை கடுமையாக விமர்சித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை விமர்சித்த, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, “அவர் தன்னை அடுத்த மன்மோகன் சிங்காகக் கருதுகிறார்” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் ரகுராம்ராஜன் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று மாளவியா கூறினார். “இந்தியாவின் பொருளாதாரம் குறித்த அவரது கருத்து அவமதித்து நிராகரிக்கப்பட வேண்டும். இது பச்சோந்தித்தனம், சந்தர்ப்பவாதம்” என்று அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார்.
பா.ஜ.க-வின் டெல்லி தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் புனித் அகர்வால், இந்தியப் பொருளாதாரம் அல்லது மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் ரகுராம்ராஜனின் அறிக்கைகளின் செய்தித் துணுக்குகளை, “ஆம், இப்போது எல்லாம் புரிகிறது மிஸ்டர் ரகுராம்ராஜன்” என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
ரகுராம்ராஜனுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் ஒற்றுமைக்காகவும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் நடக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவரான சுப்ரியா ஷ்ரினேட், ரகுராம்ராஜனை நல்ல பொருளாதார நிபுணர், நேர்மையான உயர்ந்த மனிதர், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்காக இதயம் துடிக்கும் மனிதர், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குத் தெரிந்த அச்சமில்லாத மனிதர்களில் ஒருவர்” என்று பாராட்டியுள்ளார்.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி, ரகுராம்ராஜனை வரவேற்று, பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் அதன் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும் பொருளாதாரம் முதல் வங்கிச் சீர்திருத்தங்கள் வரை அச்சமில்லாமல் பேசியதற்காக ரகுராம்ராஜனைப் பாராட்டியுள்ளார்.
ரகுராம்ராஜன் செப்டம்பர் 2013 முதல் 2016 வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். முன்னதாக, அவர் அக்டோபர் 2003 முதல் டிசம்பர் 2006 வரை சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) பொருளாதார ஆலோசகராகவும் ஆராய்ச்சி இயக்குநராகவும் பணியாற்றியவர்.
தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரை வெள்ளிக்கிழமை 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த யாத்திரை அடுத்ததாக டிசம்பர் 21-ம் தேதி ஹரியானாவில் நுழைய உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“