Rahul Bajaj Speech In The Presence Of Amit Shah: உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இருக்கும் சபையில், பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், மத்திய அரசை விமர்சிக்க தனியார் நிறுவனங்களிடையே போதுமான தைரியம் இல்லையென்று கூறினார்.
மும்பையில், சனிக்கிழமை(நேற்று) மாலை எக்கனாமிக் டைம்ஸ் என்கிற ஆங்கில நாளிதழ் நடத்திய விழாவில் பேசிய ராகுல் பஜாஜ், பசு பாதுகாவல் என்ற பெயரில் அடக்கும் கும்பல் கொலை, போபால் பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து நாடாளுமன்றத்தில் பேசியதை விமர்சிக்க தனியார் நிறுவனங்கள தயங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராகுல் பஜாஜ் “எனது நண்பர்களான தொழிலதிபர்கள் யாரும் இந்த அரசை விமர்சிக்கும் வகையில் பேச மாட்டார்கள், இதை நான் வெளிப்படையாகச் சொல்வேன் ….. ஐக்கிய முற்போக்கு கூட்டணி II ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க எங்களுக்கு வாய்ப்பு இருந்தது … தற்போதைய அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், தொழில் முனைவோர் உங்களை வெளிப்படையாக விமர்சித்தால், நீங்கள் அவற்றை மதிப்பளித்து பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு சுத்தமாக இல்லை” என்று அந்த விருது வழங்கும் விழாவில் பேசினார்.
அமைச்சர்களுடன், ஆர்ஐஎல் சிஎம்டி முகேஷ் அம்பானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பாரதி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட உயர்மட்ட தொழிலதிபர்களும் இதில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்கள் சார்ந்த பொருளாதார திட்டங்களை கண்டறிவதிலும், மக்கள் மத்தியில் இருக்கும் சமூக நல்லிணகத்தை பேணிக்காப்பதிலும் மத்திய அரசு தோற்றுவிட்டது என்றும் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.மேலும், தேசிய பொருளாதார மாநாட்டில் பேசும்போது , பல தொழிலதிபர்கள் அரசாங்க அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்து வாழ்கிறோம் என்று தன்னிடம் தெரிவித்து வருவதவாகவும் கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், சனிக்கிழமையன்று இந்திய நிறுவனங்கள் தற்காலிக பொருளாதார மந்த நிலையால் அடையும் சறுக்கல்களை பற்றி மிகவும் விவரமாக கட்டுரையில்விளக்கியது.
கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி- மார்ச் காலாண்டில் இருந்த 8.1 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, பிறகு ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ச்சியாக குறையத் தொடங்கின.சமீபத்தில் வெளியிட்ட 2019ம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், ராகுல் பஜாஜ் குறிப்பிட்டது போல் ஒரு வகையான தயக்கம் நிலவி வந்தால், அதை போக்குவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்றார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தற்போதைய தேசிய ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராக பல செய்தித்தாள்களும் கட்டுரையாளர்களும் எழுதியுள்ளனர், தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று கூறிய அமித் ஷா, உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போதைய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் இயக்கப்படுகின்றன என்று கூறினார்.
பசு பாதுகாப்பு கும்பல் கொலையைப் பற்றி, ராகுல் பஜாஜ் கூறுகையில், “ இது நம் நாட்டில் சகிப்பின்மை சூழலை உருவாக்குகிறது. இதை கண்டு நாங்கள் பயப்படுகிறோம்.சில விஷயங்களை நாங்கள் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை என்றாலும், இதற்காக யாரும் இன்றுவரையில் தண்டிக்கப்படவில்லை என்பதையும் நாங்கள் காண்கிறோம்” என்றார்.
இதற்கு பதிலளித்த ஷா, கும்பல் கொலை முன்பே நடந்தது, இப்போதை விட அதிகம் என்றே சொல்லலாம் … ஆனால் எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது சரியானதல்ல. பல வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன, தண்டனைகள் நிறைவற்றபட்டுள்ளன . ஆனால் ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை. வினீத் ஜி [டைம்ஸ் குழுமத்தின் எம்.டி வினீத் ஜெயின்] இங்கே இருக்கிறார், வழக்கு விவரங்களை தேடி வெளியிட்டால், அது எங்களுக்கு நல்லது, என்று அமித் ஷா கூறினார்.
பிரக்யா சிங் தாக்கூர் பற்றிய கருத்துக்கு பதில் கூறிய அமித் ஷா,” பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் தாக்கூரின் கூற்றுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டனர். பாஜகவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய எந்தவொரு அறிக்கையையும் ஆதரிக்கவில்லை. நாங்கள் அதை கடுமையாக கண்டிக்கிறோம்,” என்றும் தெரிவித்தார்.