Advertisment

மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! 'குரல்கள் நசுக்கப்படுகிறது' - ராகுல் கண்டனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Highlights: 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

Tn Nes Highlights - sedition Charge withdrawn by bihar police

இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதியது பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisment

"எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது, எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை, `ஆன்டி நேஷனல்' (anti-national) என்றும், `அர்பன் நக்சல்' (urban naxal) என்றும் முத்திரை குத்துவது நியாயமற்றது. இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. அதைச் செயல்படுத்தும் குரல்களில் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரலும் அடக்கம்.

ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிப்பது அல்லது எதிர்ப்பது என்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. எந்த ஆளும் கட்சியும் இந்திய அரசாகாது. எனவே, ஆட்சிக்கு எதிராகப் பேசுவது, நாட்டை எதிர்ப்பதாகாது. இத்தகைய விமர்சனங்களை, எதிர்ப்புகளை பொதுவெளியில் அனுமதிக்கும் நாடு மட்டுமே ஒரு வலுவான நாடாக இருக்க முடியும்" என்று பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும், சிறப்பாக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா. பீகாரிலுள்ள சதார் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்த தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இது ரகசியம் ஒன்றும் அல்ல. இந்த உலகிற்கே தெரியும். பிரமதர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் அவர்களைச் சிறையில் தள்ளும் நிலை இருக்கிறது அல்லது தாக்கப்படுகிறார்கள். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் நடப்பது நன்றாகத் தெரிகிறது. இந்த தேசம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. இதுஒன்றும் ரகசியம் இல்லை. தெளிவாகத் தெரிகிறது.

இந்த தேசத்தில் 2 விதமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று இந்த தேசத்தை ஒரு மனிதர் ஒரு சித்தாந்தம் ஆள வேண்டும். மற்றவர்கள் வாய்மூடி இருக்கவேண்டும். மற்றொரு புறம், எதிராகப் பேசும் காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்த தேசத்தில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதில் வித்தியாசமான கோணங்கள் இருக்கின்றன. அந்தக் குரல்களை நசுக்கக்கூடாது. இதுதான் இந்த தேசத்தில் நடக்கும் போராட்டம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, "திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Maniratnam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment