டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84-வது அகில இந்திய மாநாடு அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் கட்சி பாடுபடும். மக்களின் கோபத்தை பா.ஜ.க. பயன்படுத்துகையில், காங்கிரஸ் கட்சி அன்பை பயன்படுத்துகிறது. நாட்டை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் சின்னமாக காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் உள்ளது.
நாடு இப்போது மிகவும் சோர்வடைந்துள்ளது. அதில் இருந்து வெளியேறி முன்னேற வழி தேடுகிறது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இப்போது தேசத்திற்கு முன்னேற்றப் பாதையைக் காட்ட முடியும்.
இந்த மாநாடு நடத்தப்படுவதன் நோக்கமே, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எப்படி நாம் தயாராவது? காங்கிரஸ் கட்சி எப்படி தனது அடுத்தக் கட்ட பாதையை முன்னெடுப்பது? போன்றவற்றை ஆலோசிப்பதற்காகவே ஆகும்.
மோடியால் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். ஏன் வேலையின்மை குறையவில்லை, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை ஏன் கிடைக்கவில்லை என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியாது.
மக்களை திசை திருப்புவதற்காக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இதனால் மக்கள் ஒருவொருக்கு ஒருவர் மோதிக் கொள்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பணி மக்களை இணைப்பதும், ஒற்றுமையை உண்டாக்குவதாகும். காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மட்டும் நாட்டை ஒற்றுமைப்படுத்தும், முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று உரையாற்றினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Rahul gandhi at congress plenary session nation is divided only our party can unite it