பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி உண்மையின் பாதையை பின்பற்றுவதற்காக பாராட்டினார். மேலும், யாத்திரையில் பங்கேற்றவர்கள் ஒற்றுமை, அன்பு, மரியாதையின் செய்தியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் நுழைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையை லோனியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்றார். பிரியங்கா தனது சகோதரர் ராகுல் காந்தி, உண்மையின் பாதையை பின்பற்றுவதாகப் பாராட்டினார். மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர்களை ஒற்றுமை, அன்பு, மரியாதை ஆகியவற்றின் செய்தியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். “கோடிக்கணக்கான ரூபாய்களை" பயன்படுத்தி ராகுலின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் ராகுலைத் தவிர எல்லோரையும் வாங்குகிறார்கள்” என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
“உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், என் அன்பான மூத்த சகோதரரே. ஏனென்றால், உங்கள் இமேஜை அழிக்க அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தாலும் நீங்கள் பின்வாங்கவில்லை. அதானியும் அம்பானியும் தலைவர்களை வாங்கினார்கள், பொதுத்துறை நிறுவனங்களை வாங்கினார்கள், ஊடகங்களை வாங்கினார்கள். ஆனால், அவர்களால் என் சகோதரனை வாங்க முடியவில்லை. அவர்களால் என் சகோதரனை வாங்க முடியாது. நான் அவரைப் பற்றி பெருமைப்படுகிறேன்” என்று பிரியங்கா காந்தி லோனியில் பேசினார்.
ராகுல் காந்தி அடுத்த 3 நாட்களுக்கு உத்தரப்பிரதேசம் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது யாத்திரை ஜனவரி 6-ம் தேதி ஹரியானாவில் மீண்டும் நுழையும், அதன் பிறகு ஜனவரி 11 முதல் 20 வரை பஞ்சாபில் இருக்கும், ஜனவரி 19-ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும். அதன் பிறகு, ஜனவரி 20-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, பாரத் ஜோடோ யாத்திரை இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை பஞ்சாபுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லை வழியாகச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"