Advertisment

'துரதிர்ஷ்டசாலி மோடி' - ராகுலுக்கு கண்டனம் விடுத்த பா.ஜ.க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ‘துரதிர்ஷ்டசாலி ’ என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi calls PM Modi Unlucky and  BJP demands apology Tamil News

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ​​பிரதமர் மோடியை விமர்சித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

Rajasthan | rahul-gandhi | bjp | pm-modi: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 7ம் தேதி தொடங்கி வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ம் தேதி முதல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 

Advertisment

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ‘துரதிர்ஷ்டசாலி ’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Rahul Gandhi calls PM Modi ‘panauti’; BJP demands apology

துரதிர்ஷ்டசாலி 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. அந்தப் போட்டியை நேரில் காண  பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. இந்நிலையில், போட்டியைப் பார்க்க சென்ற பிரதமர் நரேந்திர மோடியை துரதிர்ஷ்டத்தின் முன்னோடி (பனௌட்டி) என்றும், அவர் அங்கு சென்றதால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியுற்றது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் பலோத்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "நமது வீரர்கள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டத்தின் முன்னோடி அவர்களைத் தோற்கடித்தார். தொலைக்காட்சி சேனல்கள் இதைச் சொல்லாது, ஆனால் பொதுமக்களுக்குத் தெரியும்”என்று அவர் கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியாவில் அனைவரிடமும் சீன மொபைல்கள் மட்டுமே உள்ளன என்று ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை முட்டாள்களின் தலைவர் (மூர்கோன் கா சர்தார்) என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர், "காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்காத மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொபைல் தயாரிப்பில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது" என்று கூறினார். 

கண்டனம் 

இந்நிலையில், ராகுல் காந்தி தேர்தல் தோல்வியின் விரக்தியின் காரணமாக பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “ராகுல் காந்தி உங்களுக்கு என்ன நேர்ந்தது? இழப்புகளின் விரக்தியால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு, நாட்டின் பிரதமருக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். நமது பிரதமர் நமது வீரர்களை நேசிக்கிறார், அவர்களின் மன உறுதியை உயர்த்தவும் அவர்களுக்கு உதவவும் செல்கிறார். ஆசிய போட்டி, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தோல்வியும் வெற்றியும் இருக்க தான் செய்யும். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று கூறினார். 

ஆதரவு 

இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இரண்டு நாட்களாக பலர் நினைத்துக் கொண்டிருப்பதை ராகுல் கூறியிருக்கிறார்! உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி 140 கோடி இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். 

ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதைக் கடத்தத் துடித்தனர். பா.ஜ.க தான் கடைசியாக அரசியல் நேர்மை பற்றி பேச வேண்டும். பண்டிட் நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மிகவும் மோசமான துஷ்பிரயோகங்களுடன் தொடர்ந்து அவமதிக்கும் பிரதமர் மோடி உட்பட இந்த கோட்சே பக்தர்களுக்கு கடினமான உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

சர்ச்சை பேச்சு 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோடி என்ற குடும்பப் பெயரைக் குறிப்பிட்டதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. அத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகுதான் அவர் மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார். 

இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ​​பிரதமர் மோடியை விமர்சித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "மாநகராட்சித் தேர்தல்கள், எம்.எல்-ஏத் தேர்தல்கள் அல்லது எம்.பி தேர்தல்கள் என எல்லா இடங்களிலும் உங்களின் (மோடியின்) முகத்தை நாங்கள் காண்கிறோம். உங்களிடம் ராவணனைப் போன்ற 100 தலைகள் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்தார். 

அப்போது மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை ராவணன் உடன் ஒப்பிட்டதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது. 2017 குஜராத் தேர்தலின் போதும், மோடியை “கெட்டவன்” என்று கூறியதற்காக மூத்த தலைவரான மணிசங்கர் ஐயரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது காங்கிரஸ் தற்காப்பு நிலையைத் தான் எடுத்து என்பது குறிபிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Pm Modi Rajasthan Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment