காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி துக்ளக் லேன் 12ஆவது தெருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலகத்துக்கு செவ்வாய்கிழமை (மார்ச் 28) கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இருந்து ராகுல் காந்தி 2004 மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் 4 முறை மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று இந்த பங்களாவில் குடியிருந்துவருகிறார்.
இந்த நிலையில் அவரின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்கிறார். இது தொடர்பாக ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், “தங்களின் கடிதம் பெற்றேன். நான் தொடர்ந்து வசித்துவரும் இந்தப் பங்களாவை காலி செய்கிறேன்.
எனது உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்படுவேன்” என்றார்.
ராகுல் பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “ராகுல் அவரது தாயுடன் வாழலாம்.
அல்லது நான் அவருக்காக ஒன்றை காலிசெய்வேன். அச்சுறுத்தும், அவமானப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை நான் கண்டிக்கிறேன். இந்த வீடும் எங்களுக்கு 6 மாதத்துக்கு பின்னர்தான் கிடைத்தது” என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் ராகுல் காந்திக்கு வீட்டைப் பற்றி கவலை இல்லை. நாட்டைப் பற்றிதான் கவலை” என்றார்.
காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம், “இது ராகுல் காந்தி மீதான பாஜகவின் வெறுப்பை காட்டுகிறது. நோட்டீஸ் வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு, ஒருவர் அதே வீட்டில் தொடர்ந்து தங்கலாம்.
மேலும், 30 நாள் காலத்திற்குப் பிறகு, வாடகை செலுத்துவதன் மூலம் ஒருவர் அதே வீட்டில் தொடர்ந்து தங்கலாம். ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் வருகிறார்” என்றார்.
ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் இந்த நடவடிக்கையை "குட்டி மனிதர்களின் அற்ப அரசியல்" என்று கூறினார்.
இது குறித்து அவர் “ராகுல் காந்தி பங்களாவை காலி செய்யச் சொன்னார்கள். அவர்களின் மனசாட்சி விடுமுறைக்கு சென்றுவிட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“