கத்துவா மற்றும் உனாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடத்தினார். உறங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதற்கே இரவில் இந்தப் பேரணியை நடத்துவதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைதாகியுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற கோர சம்பவம் ஒருபுறம் இருக்க, உத்திரப் பிரதேசத்திலும், 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் தெரிவித்தார், இருப்பினும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் அம்மாநில அரசு இதுவரை எடுக்கவில்லை.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் இது வரை இந்தச் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் நேற்று ராகுல் காந்தி தலைமையில் மெகுவத்தி பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதோதரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர். உனா மற்றும் கத்துவா சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் மௌனம் காத்து வருவது ஏன் என்ற கேள்வியையும் காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், இது போன்ற குற்றங்களில் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.