As regional parties bristle at remark, Rahul Gandhi clarifies: ‘Congress doesn’t want to be Big Daddy’: மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையோ இல்லாததால், பாஜகவை எதிர்த்து காங்கிரஸால் மட்டுமே போராட முடியும் என்ற ராகுலின் கருத்துக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இப்போது மிகவும் நுணுக்கமான நிலையைத் தேர்வு செய்துள்ளார். உதய்பூரில் அவர் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும், காங்கிரஸை "பெரிய தந்தை"யாகக் (பிக் டாடி – பெரிய கட்சி) கருதவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மற்ற எதிர்க்கட்சிகளை விட காங்கிரஸ் பெரிய கட்சி என்று கூறவில்லை என ராகுல் காந்தி கூறினார். அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியான போரில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, “ஆர்எஸ்எஸ்சின் தேசியப் பார்வைக்கும் காங்கிரஸின் தேசியப் பார்வைக்கும் இடையேதான் சித்தாந்தப் போர் நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார்.
லண்டனில் ஒரு உரையாடலின் போது, வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டது மற்றும் பாஜகவின் ஊடகங்களின் ஆதிக்கத்தால் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்று ராகுல் காந்தி கூறினார். இந்தியாவில் நடக்கும் போராட்டம் அரசியல் சண்டை அல்ல, இது ஒரு அரசியல் அமைப்புக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை அல்ல என்றும் அவர் கூறினார்.
"நாம் இப்போது இந்திய அரசின் நிறுவனக் கட்டமைப்பை எதிர்த்துப் போராடுகிறோம், இது ஒரு அமைப்பால் கைப்பற்றப்பட்டு வருகிறது, இதற்கு எதிராக போராடுவதே எங்களுக்கான ஒரே வழி... நமது நாட்டின் நிறுவன கட்டமைப்பை மீட்க, எங்களுக்கு ஒரே வழி இந்திய மக்களில் பெரும் திரளிடம் சென்றடைவதுதான். அது காங்கிரஸூக்கு மட்டுமல்ல... அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும்” என்று அவர் கூறினார்.
ஒரு பெரிய மக்கள் தொகைக்கு மிகவும் நெருக்கமான அமைப்பு முறை பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வேலையின்மை, விலைவாசி உயர்வுகள், பிராந்திய பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளில் பெரிய அளவிலான வெகுஜன இயக்கங்களையும் நாம் சிந்திக்க வேண்டும், மேலும் எதிர்க்கட்சியில் உள்ள எங்கள் நண்பர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதனால் நான் காங்கிரஸை பெரிய தந்தையாக பார்க்கவில்லை. இது எதிர்க்கட்சிகளுடன் ஒரு குழு முயற்சி, ஆனால் இது இந்தியாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம், என்று ராகுல் காந்தி கூறினார்.
இது தொடர்பாக அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறாரா என்று கேட்டதற்கு, “ஆம். உதய்பூரில் நான் கூறிய கருத்து என்னவென்றால், இது இப்போது ஒரு கருத்தியல் போர் மற்றும் இது ஒரு தேசிய கருத்தியல் போர், அதாவது, நிச்சயமாக, நாங்கள் மதிக்கிறோம்... எடுத்துக்காட்டாக, திமுகவை ஒரு தமிழ் அரசியல் அமைப்பாக, ஆனால் காங்கிரஸ் தேசிய அளவில் சித்தாந்தம் கொண்ட கட்சி. எனவே, எதிர்க்கட்சிகளை செயல்படுத்தும் ஒரு கட்டமைப்பாக காங்கிரஸ் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். மற்ற எதிர்க்கட்சிகளை விட எந்த வகையிலும் காங்கிரஸ் மேலானது அல்ல. நாம் அனைவரும் ஒரே போரில் போராடுகிறோம் ... அவரவர்களுக்கு அவர்களின் இடம் உள்ளது ... எங்களுக்கு எங்கள் இடம் உள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ன் தேசியப் பார்வைக்கும், காங்கிரஸின் தேசியப் பார்வைக்கும் இடையேயான சித்தாந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
கடந்த வாரம் உதய்பூர் சிந்தன் ஷிவிரில் (காங்கிரஸின் சிந்தனை அமர்வு) தனது இறுதிக் கருத்துரையில், மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ அல்லது மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையோ இல்லாததால் காங்கிரஸால் மட்டுமே பாஜகவை எதிர்த்துப் போராட முடியும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். “மாநிலக் கட்சிகள் சில சாதியைச் சார்ந்தவை. அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, ”என்றும் ராகுல் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: ‘பாஜக அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்கு நிர்ணயித்து உழைக்க வேண்டிய நேரம் இது’ – மோடி பேச்சு
“இந்தப் போராட்டத்தை ஒரு மாநிலக் கட்சியால் நடத்த முடியாது. ஏனெனில் இது கருத்தியல் போர். காங்கிரஸின் சித்தாந்தத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போராடுகிறது. பாஜகவானது, காங்கிரஸ், அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களைப் பற்றிப் பேசும் ஆனால் மாநிலக் கட்சிகளைப் பற்றிப் பேசாது. ஏனென்றால், மாநிலக் கட்சிகளுக்கான இடம் குறித்து அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்களிடம் சித்தாந்தம் இல்லாததால் பாஜகவை தோற்கடிக்க முடியாது. அவர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். எங்களிடம் ஒரு மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை உள்ளது. மேலும் எங்கள் போராட்டம் சித்தாந்தம் பற்றியது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தபோதிலும் பாஜக எப்படி தேர்தலில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் ஏன் வெற்றி பெறவில்லை, அதற்கு “ஒருமுகப்படுத்தல் மற்றும் ஊடகங்களின் ஒட்டுமொத்த ஆதிக்கம்” காரணம் என்று ராகுல் காந்தி கூறினார்.
“மேலும், ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் அதிக மக்களிடையே ஊடுருவிய ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளும் காங்கிரஸும் அத்தகைய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத 60-70 சதவீத மக்களிடம் நாம் இன்னும் தீவிரமாகச் செல்ல வேண்டும், அதை நாம் ஒன்றாகச் செய்ய வேண்டும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.