சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் மூன்றுநாள் தேசிய பழங்குடியினர் நடன விழாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடனமாடி தொடங்கி வைத்தார். விழாவில் ராகுல் காந்தி பழங்குடியினர்களுடன் நடனம் ஆடிய வீடியோ நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
சத்தீஸ்கரில் தேசிய பழங்குடி நடன விழா முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மூன்று நாள் நடன விழா மற்றும் தற்போதைய நாட்டுப்புற கலை கலாச்சார நிகழ்வுகளில் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஆறு நாடுகளைச் சேர்ந்த 1,350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில், இருபத்தி ஒன்பது பழங்குடி கலை குழுக்கள் நான்கு வெவ்வேறு நடன வடிவங்களில் 43 க்கும் மேற்பட்ட வடிவங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மூன்றுநாள் தேசிய பழங்குடியினர் நடன விழாவை நடனமாடி தொடங்கி வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது விட்டர் பக்கத்தி, “இந்த தனித்துவமான விழா நமது செழுமை மிக்க பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை காண்பிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியினர் நடன விழாவில் ராகுல் காந்தி, பாரம்பரிய சிவப்பு கிரிடம் அணிந்து, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் மத்தளம் அடித்துக்கொண்டு நடனமாடினார்.
இந்த நடனம் பஸ்தார் பகுதியில் உள்ள அபுஜமத்தின் தண்டமி மடியா பழங்குடியினரின் மிகவும் பிரபலமான நடனம். இது கௌர் நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடனம் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரால் நிகழ்த்தப்படுகிறது. ஆண்கள் எருது கொம்புகள் வைத்த கிரீடம் அணிந்து நடனமாடும்போது மத்தளம் வாசிப்பார்கள் என்று பழங்குடியினர் விழாவை நடத்தும் அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியுடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் கலந்துகொண்டு நடனமாடினர்.
விழா நிகழ்ச்சிநிரல்களின்படி, திருமணங்கள் மற்றும் பிற வழக்கமான சடங்குகள், பாரம்பரிய விழாக்கள், விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட நடனப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை 9 மணி முதல் குஜராத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வாசவா நடனம் ஆடினர். ஆந்திரப் பிரதேச கலைஞர்கள் திம்சா நடனம் ஆடினர். திரிபுராவைச் சேர்ந்த கலைஞர்கள் மமிதா நடனம் ஆடினர்.
நாளை மூன்றாம் நாள், உத்தரகாண்ட் மாநிலத்தின் லஷ்பா, ஜம்முவின் பக்கர்வால், மத்திய பிரதேசத்தின் பாதம், இமாச்சல பிரதேசத்தின் காடி நடனங்கள், மற்றும் கர்நாடகா, சிக்கிமின் நாட்டுப்புற நடனங்கள், ஜார்க்கண்டின் டாம்காச் நடனம், சத்தீவகா மாவட்டத்தின் தண்டமி நடனம் ஆகியவை நிகழ்த்தப்பட உள்ளன.
இந்த விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் சர்மா, அஹ்மத் படேல், மோதிலால் வோரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.