Rahul Gandhi | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று நேற்று புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rahul Gandhi declares over Rs 20 crore in assets
ராகுல் காந்தி சொத்து மதிப்பு
இந்த நிலையில், வயநாடு தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.4 கோடி ஆகும். இதில் அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ. 9.25 கோடி மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ. 11.15 கோடி ஆகும். மேலும், அவர் தனக்கு ரூ.49.79 லட்சம் கடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, ராகுல் காந்தியின் பங்குச் சந்தை முதலீடுகள் ரூ.4.3 கோடியும், மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.3.81 கோடியும், வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரூ.11 கோடி மதிப்பில் டெல்லியின் மெஹ்ராலியில் பிரியங்கா காந்தி வதோராவுக்குச் சொந்தமான விவசாய நிலமும், குருகிராமில் உள்ள அலுவலக இடமும் இருப்பதாகவும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தியின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.15.89 கோடி என்றும், அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.5.8 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றிருப்பதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி தன்மீது 18 எஃப்.ஐ.ஆர்-களும், ஒரு அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்னி ராஜா சொத்து மதிப்பு
இதற்கிடையில், அவரது போட்டியாளரான சி.பி.ஐ-யின் அன்னி ராஜா முதல் முறையாக போட்டியிடுகிறார். 60 வயதான அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி ராஜாவை மணந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
அன்னி ராஜா தனது வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1.61 கோடி உள்ளதாக கூறியுள்ளார். இதில் ரூ. 89.44 லட்சம் அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ. 71.69 லட்சம் அசையா சொத்துகள் உள்ளன. தனக்கு எந்த நிதிப் பொறுப்பும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னி, கேரளாவில் உள்ள காலிகட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐபிசி குற்றங்களுக்கான ஒரு கிரிமினல் வழக்கு எஃப்ஐஆர் நிலுவையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“