கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'மோடி' பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.
அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ராகுல் காந்தியின் தண்டனைக்கு எதிரான மனுவை குஜராத் நீதிமன்றம் விசாரித்தது. அதே நேரத்தில் வாதங்கள் மே 2 அன்று முடிவடைந்தன. இந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தீர்ப்பு
இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும், ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கவுன்சில் (ஏஐசிசி) பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
We will study the Gujarat HC verdict on Sh. @RahulGandhi ji’s conviction and explore all available legal options.
Rahul ji is a fierce voice that takes the Modi government head on. No force can silence him, the truth will triumph and justice will ultimately prevail. Every…— K C Venugopal (@kcvenugopalmp) July 7, 2023
கேரளாவின் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “எங்களுக்கு முன் இன்னும் ஒரு வழி இருக்கிறது. அதுதான் உச்ச நீதிமன்றம். அங்கு மேல்முறையீடு செய்வோம். காங்கிரஸ் கட்சியும் அந்த விருப்பத்தை நாடும்” என்று கூறினார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கே.சி.வேணுகோபால், "குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஆய்வு செய்வோம். ராகுல் காந்திக்கு ஆதரவான அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்வோம்.
ராகுல் ஜி, மோடி அரசாங்கத்தை நேருக்கு நேர் கொண்டு செல்லும் கடுமையான குரலாக செயல்படுகிறார். எந்த சக்தியாலும் அவரை மௌனமாக்க முடியாது. உண்மை வெல்லும், இறுதியில் நீதி வெல்லும். இந்த போராட்டத்தில் தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் ராகுலுக்கு ஆதரவாக உள்ளனர்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.