தனது தந்தை ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினிக்காக அனுதாபப்பட்டவர் பிரியங்கா என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தனது சகோதரியுமான பிரியங்கா காந்தியை ஆதரித்து, கேரளாவில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தற்போது இந்தியாவில் வெறுப்பு அரசியல் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
குறிப்பாக, "இன்றைய சூழலில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதையே மறந்துவிட்டனர். எங்கு பார்த்தாலும் வன்முறை, கோபம், வெறுப்பு ஆகியவற்றையே பார்க்க முடிகிறது. ஆனால், மனிதத் தன்மையை காண முடிவதில்லை" என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தனது தந்தையின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி என்ற பெண்ணை சந்தித்து அவரை ஆரத்தழுவியவர் பிரியங்கா காந்தி. நளினியின் நிலை குறித்து தான் கவலை கொள்வதாக பிரியங்கா காந்தி என்னிடத்தில் கூறினார். அப்படியொரு பயிற்சி பெற்றவர் பிரியங்கா" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, "இந்தியாவிற்கு வெறுப்பு அரசியல் தேவையில்லை. அன்பு மற்றும் பரிவான அரசியலே இந்தியாவிற்கு அவசியம்" எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“