Puducherry | புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது நிரம்பிய ஆர்த்தி என்ற சிறுமியை கஞ்சா போதை ஆசாமிகள் பாலியல் வன்கொடுமை செய்து துடிக்க துடிக்க கொலை செய்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் மகள்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன?
2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 31 ஆயிரம் வழக்குகள் பாலியல் வன்புணர்வு வழக்குகள் ஆகும்.
உத்தரகாண்டில் சாலையில் அமர்ந்திருக்கும் அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி.
இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம்.
பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“