காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கள் கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பதவி ஏற்பார் என, அக்கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள சோனியா காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் நீண்ட கால தலைவராக கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து சோனியா காந்தி நீடிக்கிறார். இந்நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய தலைவர் பதவி ஏற்க உள்ளார்.
இதுவரை, 70 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், குஜராத், மற்றும் ஹிமாச்சல பிரதேசம் தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தலைவராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தலைவராக பதவியேற்பதர்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுலுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தன் ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை வேட்பாளராக வழிமொழிந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ”காங்கிரஸ் கட்சியின் சிறந்த கலாச்சாரத்தை ராகுல் காந்தி கடைபிடிப்பார்”, என தெரிவித்தார்.