பிரதமருக்கு அதானிக்கும் இருக்கும் தொடர்பு பற்றி ராகுல் காந்தி கூறியதில் உண்மைத் தன்மையில்லை என்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் 53 நிமிடங்கள் ராகுல் காந்தி பேசியது, அரசியல் சூழலில் முக்கியமான ஒன்றாக கருத்தப்படுகிறது. ராகுல் காந்தி பேசியபோது, ஆளுங் கட்சியின் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டது. ராகுல் கூறுவதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இதுபோல ஆதரங்கள் ஏதும் இல்லாத குற்றச்சாட்டை பிரதமருக்கு எதிராக பேசக்கூடாது என்று எதிர்ப்பு குரல் எழுந்தது.
” உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 –வது இடத்தில் இருந்த அதானி 8 ஆண்டுகளில் எப்படி 2 வது இடத்திற்கு வருகிறார். அதானிக்கும் மோடிக்கும் இடையில் என்ன தொடர்பு. எவ்வளவு முறை அதானியுடன் பிரதமர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளார். எத்தனை முறை அதானி பின்னர் வந்து அவரது பயணங்களில் சேர்த்துகொண்டார்? பிரதமர் சென்ற நாடுகளில் எத்தனை நாடுகள் அதானியுடன் வியாபார உறவு ஏற்படுத்துக்கொண்டது. மேலும் அதானி பாஜக கட்சிக்காக எவ்வளவு நிதி கொடுத்தார் என்று தொடர் கேள்விகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.
2024- தேர்தலை முன்வைத்து இப்போது ராகுல் காந்தி மோடியையும் அதானியையும் சேர்த்து வைத்து பேசுகிறார். இதுபோல கடந்த 2019-ம் ஆண்டு” செளாகிதார் கி சோர் “ என்று ரபேல் ஊழல் தொடர்பாக மோடியை விமர்சித்தார்.
ராகுல் குறிப்பிடும்போது, ,தனது யாத்திரையில் பல்வேறு விவசாயிகள், பழங்குடியினர்,இளைஞர்கள் சந்தித்ததாகவும் அவர்கள் அனைவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, எம்.எஸ். பி மற்றும் அக்னிவீர் ஆகியவை தங்களை பாதிப்பதாக தெரிவித்தனர் என்று கூறினார்.
அக்னிவீர் திட்டம் என்பது இந்திய ராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்டது அல்ல என்று மூத்த ராணுவ அதிகாரி தன்னிடம் கூறியதாவும். இது ஒரு ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
விமானநிலையத்தை உருவாக்குவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கு, விமானநிலையத்தை அமைக்க உரிமம் கொடுக்ககூடாது என்ற விதி இருந்தது. ஆனால் அதானிக்காக இந்த விதியை மாற்றி அமைத்தது மத்திய அரசு. அதானிக்கு 6 விமானநிலையம் வழங்கப்பட்டது. மும்பை விமானநிலையம் ஜி.வி.கே-யிடம் இருந்தது. சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ரைய்டுகளால் அதை அதானிக்கு கொடுத்தது மத்திய அரசு.
இதுபோல இந்திய பாதுகாப்பு விஷயத்திலும் அதானியின் நிறுவனங்களுக்குத்தான் முதல் இடம். பிரதமர் இஸ்ரேலுக்கு சென்று திரும்பிய பிறகு 90 % இந்திய- இஸ்ரேல் ஆயுத வியாபாரம் அதானிக்கு சென்றது என்று கூறினார்.
மேலும் அதானி காற்றாலை தொழிச்சாலைக்கு உதவ வேண்டும் என்று இலங்கை அதிபர் கொத்தபயாவுக்கு பிரதமர் அழுத்தம் கொடுத்தார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது என்று அவர் கூறினார்.