மக்களவையில் அலுவல் மொழி தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு துணை கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது தமிழக மக்களின் இதயம் போன்ற மிக முக்கியமான பிரச்சினை. ஆகவே, துணைக் கேள்வி எழுப்பக்கூடாது என்று சொல்லி தவறு செய்யாதீர்கள்” என்று ஆவேசமாக பேசினார்.
மக்களவையில் இன்று (மார்ச் 17) கேள்வி நேரத்தின்போது அலுவல் மொழி தொடர்பாக பாஜக எம்.பி அரவிந்த் குமார் ஷர்மா எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார்.
அப்போது திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழ் மொழி தொடர்பாக துணைக் கேள்வி எழுப்ப வேண்டுமென கோரிக்கை வைத்தார். டி.ஆர்.பாலுவின் கோரிக்கைக்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை தொடர்ந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த திமுக, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இது மிக முக்கியமான விவகாரம் என்பதால் துணைக் கேள்வி எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். அப்போது திமுக எம்.பி டி.ஆர்.பாலுவின் கோரிக்கைக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது தமிழக மக்களின் இதயம் போன்ற மிக முக்கியமான பிரச்சினை. ஆகவே, துணைக் கேள்வி எழுப்பக்கூடாது என்று சொல்லி தவறு செய்யாதீர்கள்” ஆவேசமாக வலியுறுத்திப் பேசினார்.
ஆனாலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தில் அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார். இதைக் கண்டித்த திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த அவையில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அனைத்து மொழியினரும் உள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த எம்.பி.க்களும் தமிழ் மொழி குறித்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, உங்களுக்கு ஒரு துணை அனுமதிக்கப்படுகிறது. சபாநாயகர் என்னை காயப்படுத்துவது பரவாயில்லை, நான் பேசுவதை அவர் விரும்பவில்லை என்று எனக்கு புரிகிறது. நான் ஒரு எம்.பி எனக்கு சில உரிமைகள் உள்ளன. அவர் அதைப் பறிக்க முடியும். இன்று மொத்த தமிழ் எம்.பி.க்களும் தமிழ் மொழி பற்றி ஒரு துணை கேட்க விரும்பினர்.
இது தமிழக மக்களைப் பற்றியது, அவர்களின் மொழியைப் பற்றியது. தங்கள் மொழியை பாதுகாக்கவும், அதுகுறித்து பேசவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக எம்.பி.க்கள் தங்களின் மொழி குறித்து கேள்வி கேட்பதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை. தமிழ் மொழி குறித்த துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்க மறுத்ததால், தமிழக மக்கள் இன்று நாடாளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டனர். தமிழ் மக்களுக்கு இந்த அநீதியையும் நாடாளுமன்றத்தின் நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் மரபுகளை புறக்கணிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.” என்று கூறினார்.
#WATCH Congress MP Rahul Gandhi: It is like a tsunami is coming. India should be preparing itself not just for #Coronavirus but for the economic devastation that is coming. I am saying it again & again. Our people are going to go through unimaginable pain in the next 6 months. pic.twitter.com/Pk6cMDVhNr
— ANI (@ANI) March 17, 2020
தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “இது சுனாமி வருவது போல ஆகும். இந்தியா கொரோனா வைரஸுக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நம்முடைய மக்கள் அடுத்த 6 மாதங்களில் கற்பனை செய்ய முடியாத வேதனையை அனுபவிக்கப் போகிறார்கள்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.