Advertisment

ராகுல் யாத்திரை: கோவில், மசூதி, தேவாலயத்தில் நிறுத்தம்; அணிவகுப்பில் கலந்து கொள்ளும் சோனியா, கார்கே

காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவை ஒட்டி நடைபெற்றது.

author-image
WebDesk
Oct 04, 2022 10:03 IST
Rahul Gandhi in Bengaluru

Rahul Gandhi in Bengaluru

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகாவில் தனது பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். மாநிலத்தில் 4வது நாள் யாத்திரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூரு நகரம் வழியாகச் சென்ற ராகுல் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்தார்.

Advertisment

மதங்களின் சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கமே இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான அடித்தளம்’ என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

சாமுண்டி மலையில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோயில், மஸ்ஜித்-இ-ஆஸாம் மசூதி மற்றும் செயின்ட் பிலோமினா கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றுக்கு ராகுல் சென்ற புகைப்படங்களின் தொகுப்பு அந்த ட்வீட்டில் இருந்தது. மூன்று வழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவை ஒட்டி நடைபெற்றது. மைசூரிலிருந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா வரையிலான 12 கிமீ தூரத்தில், காலை 11 மணியளவில் ஓய்வு எடுப்பதற்கு முன்பு ராகுல் பலருடன் உரையாடினார்.

யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தவர்களில் அயூப் அகமதுவும் ஒருவர். இவர் கடந்த 18 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத பல இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வருகிறார். மூத்த சோசலிஸ்ட் பா.மல்லேஷ் தலைமையிலான குழு காங்கிரஸ் தலைவரை சந்தித்தது. மங்களா என்ற பெண் ஆட்டோ டிரைவருடனும் ராகுல் உரையாடினார்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஒரு இடைவெளியைத் தொடர்ந்து, அணிவகுப்பு மண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுராவை நோக்கி நகர்ந்தது.

கூடைகள் மற்றும் பிற பொருட்களை நெய்யும் கைவினைஞர்களுடன் ராகுல் உரையாடுவது, ஆதரவாளர்களுடன் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படும் கரும்புகளை ருசிப்பது போன்ற படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நடைப்பயணம் தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கினாலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மைசூரு வந்ததால், அது பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இரண்டு நாள் இடைவேளைக்குப் பிறகு வியாழக்கிழமை அணிவகுப்பு மீண்டும் தொடங்கும் போது அதில் கலந்து கொள்வார்கள்.

குடகு மாவட்டம் மடிகேரி அருகே உள்ள ரிசார்ட்டில் சோனியாவும், ராகுலும் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரால் அவர்களை ஏற்றிச் செல்ல முடியாமல் கடைசி நிமிடத்தில் திட்டம் மாற்றப்பட்டது. இருவரும் இப்போது கபினியில் உள்ள ரிசார்ட்டில் தங்கவுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rahul Gandhi #Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment