ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைமையகத்தில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றுவார் என்றும், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கும் லால் சௌக் சதுக்கத்தில் அல்ல என்றும் காங்கிரஸ் கூறிய சில வாரங்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை லால் சௌக் சதுக்கத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
“பிற இடங்களில் அனுமதி வழங்கப்படாததால், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 30ஆம் தேதி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்ற வேண்டியிருந்தது. நேற்று மாலை, மாநில நிர்வாகம் அவரை லால் சௌக்கில் கொடி ஏற்ற அனுமதித்தது, ஆனால் அது #பாரத்ஜோடோ யாத்திரையின் முடிவில் இன்று 29 ஆம் தேதி செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது, என்று ”காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்தார். ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி உட்பட மற்ற கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி லால் சௌக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பின்னர் ஜெய்ராம் ரமேஷ் இந்த ட்வீட்டைப் பகிர்ந்தார்.
இதையும் படியுங்கள்: எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தால் மட்டுமே பொருத்தமாகும்: ஜெய்ராம் ரமேஷ்
நிகழ்வின் புகைப்படங்களை வெளியிட்ட ஜெய்ராம் ரமேஷ், “75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு லால் சௌக்கில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். இன்று மதியம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார்,” என்று பதிவிட்டார்.
இம்மாத தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தலைவரும், கட்சியின் எம்.பி.யுமான ரஜினி பாட்டீல் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “லால் சௌக்கில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கு ஏற்கனவே கொடி உயரமாக பறந்து வருகிறது,” என்றார்.
ஸ்ரீநகர் நகரின் வணிக மையமான லால் சௌக் அல்லது ரெட் சதுக்கம் காஷ்மீரின் சரித்திரத்திற்கு சாட்சியாக உள்ளது. ஸ்ரீநகர் நகரின் முக்கிய சதுக்கத்திற்கு ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்ட இடதுசாரி ஆர்வலர்களால் லால் சௌக் என்று பெயரிடப்பட்டது. பல தசாப்தங்களாக, 1980 இல் கட்டப்பட்ட கடிகாரக் கோபுரத்தைக் கொண்ட இந்த முக்கிய நகர மையம், காஷ்மீர் பள்ளத்தாக்கின் போட்டியிடும் அரசியல் சித்தாந்தங்களின் போர்க்களமாக இருந்து வருகிறது.
நேரு முதன்முதலில் லால் சௌக்கில் மூவர்ணக் கொடியை 1948-ல் தேசிய மாநாட்டின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லா அவருடன் கூட்டணி என்று அறிவித்தபோது ஏற்றினார். அப்போது லால் சௌக்கில் நடந்த பேரணியில் நேரு காஷ்மீர் மக்களுக்கு “சுயநிர்ணய உரிமையை” உறுதியளித்தார்.
1990 இல் பயங்கரவாதம் வெடித்தபோது, லால் சௌக் சதுக்கம் அவர்களுக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே போர்க்களமாக மாறியது. தலைப்புச் செய்தியாக, தீவிரவாதிகள் அடிக்கடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை வீரர்களை குறிவைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷி, குடியரசு தினத்தன்று லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றும் திட்டத்தை அறிவித்தார். ஜனவரி 26, 1992 அன்று, நரேந்திர மோடி உட்பட கட்சி சகாக்களுடன் முரளி மனோகர் ஜோஷி ஸ்ரீநகரில் இருந்தார், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், நகரின் மையத்தில் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை பொழிந்தபோது, லால் சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றினார்.
பாரத் ஜோடோ யாத்ரா அணிவகுப்பு முடிவுக்கு வந்துவிட்டது, ஆனால் நான்கு மாதங்களுக்கும் மேலான பயணம் திங்களன்று பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துடன் முடிவடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil