பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Truth can be expunged in Modi’s world, but not in reality,’ says Rahul Gandhi
மக்களவை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில், பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். மேலும் அக்னிபாத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டும் மத்திய அரசை அவர் சாடினார். இதற்கு அந்தந்த துறை மந்திரிகள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அனல் பறந்த விவாதம் நடந்தது. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை குறித்து ராகுல்காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. இந்துக்கள், பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்களவையில் தனது உரையின் சில பகுதிகள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறியது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மக்களவையில் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி உலகில் உண்மையை அகற்ற முடியும், ஆனால் உண்மையில் உண்மையை முடியாது.
நான் என்ன சொல்ல வேண்டும், நான் சொன்னேன், அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அகற்றலாம். ஆனால் உண்மை தான் வெல்லும்." என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாட்டின் கள நிலவரம் மற்றும் உண்மையான தகவல்களையே பேசினேன். எனது பேச்சின் முக்கியப் பகுதிகளை நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனது உரையின் சில பகுதிகள் அகற்றப்பட்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கோட்பாட்டிற்கு எதிரானது. நான் சபையில் தெரிவிக்க விரும்புவது அடிப்படை யதார்த்தம், உண்மை நிலை..." என்று அவர் கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.