/indian-express-tamil/media/media_files/2025/09/18/rahul-gandhi-2025-09-18-13-59-05.jpg)
'ஜனநாயகத்தை கொல்வோருக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பு': ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது மீண்டும் ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் "வாக்கு திருடர்களை" பாதுகாப்பதாகவும், ஜனநாயகத்தைக் கொல்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
"வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுகின்றன"
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிரூபிக்க சில ஆதாரங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், "இந்தியாவில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், பல்வேறு தொகுதிகளில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய முறைகேடு" என்று கூறினார். மேலும், இந்த வெளிப்பாடுகள் இளைஞர்களுக்கு தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பதை உணர்த்தும் ஒரு மைல்கல் என்றும் அவர் தெரிவித்தார். எனினும், தான் முன்னதாக அறிவித்த "ஹைட்ரஜன் குண்டு" போன்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுலின் குற்றச்சாட்டு - தேர்தல் ஆணையம் மறுப்பு
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்த தேர்தல் ஆணையம், அவை "தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" எனத் தெரிவித்தது. "எந்தவொரு தனிநபராலும் ஆன்லைனில் வாக்காளர் பெயரை நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு அளித்த பிறகே எந்தவொரு நீக்கமும் நடைபெறும்" என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. மேலும், 2023-ஆம் ஆண்டு அலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த முறைகேடான நீக்க முயற்சிகளைத் தாங்களே கண்டறிந்து, அது குறித்து வழக்கும் பதிவு செய்ததாக தேர்தல் ஆணையம் கூறியது.
ஆதாரங்களுடன் ராகுலின் வாதம்
ராகுல் காந்தி கர்நாடகாவின் அலந்த் சட்டமன்றத் தொகுதியின் தரவுகளைப் பயன்படுத்தி தனது வாதத்தை முன்வைத்தார். அங்கு காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகள், தேர்தலுக்கு முன்னதாகவே திட்டமிட்டு நீக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கர்நாடக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திவரும் விசாரணையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
"வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டது குறித்து விசாரித்தபோது, வேறு சிலரின் மொபைல் எண்கள் மூலம் போலியான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு, இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது" என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அலந்த் தொகுதியில் 6 ஆயிரத்து 18 வாக்குகளும், மகாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் 6 ஆயிரத்து 850 போலியான ஆன்லைன் பதிவுகளும் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
"தேர்தல் ஆணையருக்கு யார் இந்தச் செயலைச் செய்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆபரேஷன் எங்கு நடக்கிறது என்பதை அறிய கர்நாடக சி.ஐ.டி. 18 மாதங்களில் 18 கடிதங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. ஜனநாயகத்தின் கொலையாளிகளை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது" என்று ராகுல்காந்தி ஆவேசமாகக் கூறினார். இறுதியாக, "தேர்தல் ஆணையத்திற்குள் உள்ளேயே இருந்து எங்களுக்கு உதவிகள் வரத் தொடங்கியுள்ளன. வாக்குத் திருட்டு நடப்பதாக மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்" என்று கூறி தனது பேட்டியை ராகுல்காந்தி முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.