ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எங்கும் கூறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Advertisment
காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு, கடந்த ஆண்டு டிச.11-ம் தேதி ராகுல் போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம் 16ம் தேதி 87வது தேசிய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் முன்னிறுத்தப்படுவார் என கூறப்பட்டு வந்தது. பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இதே கருத்தை கூறி வந்தனர். இதனால், சாமானிய மக்களும் ராகுல் தான் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் என்று ரீச் ஆகியிருந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எங்கும் கூறவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எங்கும் கூறவில்லை. மாறாக ஒரு சிலர் அவ்வாறு கூறியதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதனை மறுத்து இதனை பற்றி பேசக்கூடாது என தடை விதித்தது. பிரதமர் பிரச்னையே எங்களுக்கு கிடையாது.
எங்களது நோக்கம் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு ஒரு முற்போக்கு ஆட்சி, மனித சுதந்திரத்தை பறிக்காத ஆட்சி, மக்களை அச்சுறுத்தாத ஆட்சி, வரி பயங்கரவாதம் என்பதை வியாபாரிகள் மீது திணிக்காத ஆட்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆட்சி, விவசாயிகளுக்கு நியாயமான வருமானம் கிடைக்கக்கூடிய ஆட்சி. அத்தகைய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
காங்கிரஸ் கட்சி பிரதமராக ஒருவரை கொண்டு வருவோம் என கூறவே இல்லை. ராகுல் காந்தியும் அவ்வாறு எங்கேயும் கூறவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டும், கூட்டணி வெல்ல வேண்டும், அதன் பின்னர் கலந்து ஆலோசித்து பிரதமரை தேர்வு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.