புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், ரஃபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசுகையில், "பல்வேறு போர் விமானங்களை தயாரித்த HAL நிறுவனத்துக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை ஏன் வழங்கவில்லை? ஒப்பந்தம் போடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு, அதாவது தனது நண்பருக்கு இந்த ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் கொடுத்தது ஏன்?.
நொடிந்த நிலையில் இருக்கும் நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரஃபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்திருக்கிறார்.
சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, 'என் மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை' என்று கூறுகிறார். ரஃபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் நேரடியாக கேள்வி கேட்டுவரும் நிலையில் மோடி இப்படி பொய் பேசி இருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல், எங்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவில்லாமல் தான் மோடி அவைக்கு வருவதில்லை. அஇஅதிமுக எம்.பி.க்களுக்கு பின்னால் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொள்கிறார். மோடி தனது அறையில் ஒளிந்து கொள்கிறார்.
ரஃபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ அமைச்சரும், தற்போதைய கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. அதனை ஒலிபரப்ப எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என ராகுல் தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'நீங்கள் அவையில் வெளியிடும் ஆடியோ முழுக்க முழுக்க நம்பத்தன்மைமிக்கது என்று பொறுப்பேற்று கொள்கிறீர்களா?' என ராகுலிடம் அருண் ஜெட்லி கேள்வி எழுப்ப, 'அப்படி எல்லாம் பொறுப்பேற்க முடியாது' என ராகுல் காந்தி கூற, 'தொடர்ந்து பொய்களை பேசி வருவதே உங்களது வேலையாகி விட்டது' என அருண் ஜெட்லி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்த விவாதத்தின் இடையே, மேகதாது அணை பிரச்சனை குறித்து அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல், "மேகதாது அணை பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர், ரஃபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரை பேசவிடாமல், மோடியை காப்பாற்றும் நோக்கத்தில் இடையூறு செய்கிறார்கள்" என நேரடியாக அதிமுக எம்.பி.க்கள் மீது குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, மக்களவையில் சபாநாயகர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக அதிமுகவை சேர்ந்த 26 எம்.பி.க்கள் 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.