மக்களவையில் மகா கும்பமேளாவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேசிய பிறகு, பிரயாக்ராஜில் நடந்த மாபெரும் மத நிகழ்ழ்வின் கூட்ட நெரிசலில், "இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை" என்று லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க:
அவையில் பிரதமரின் உரைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் என்ன சொன்னார்... நான் அதை ஆதரிக்க விரும்பினேன்... கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம். இறந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தவில்லை என்று எனக்கு ஒரு புகார் இருந்தது” என்றார்.
பிரதமர் தனது உரையின் போது வேலைவாய்ப்பு பற்றிப் பேசியிருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். “நான் சொல்ல விரும்பிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், கும்பமேளாவுக்கு ஒரு இடம் இருக்கிறது, ஆனால், கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயத்தை விரும்புகிறார்கள்... அவர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும், பிரதமர் அதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.” என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையை முடித்த பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச விரும்பினர். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “அவர்கள் யாரையும் பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயக கட்டமைப்பின் கீழ், லோக்சபாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இது புதிய இந்தியா” என்று கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், “கடந்த ஆண்டு, அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவின் போது, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தயாராகி வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்தோம். இதற்கு சரியாக ஒரு வருடம் கழித்து, மகா கும்பமேளா ஏற்பாடு நம் அனைவரிடமும் இந்த எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் இந்த கூட்டு உணர்வு நாட்டின் வலிமையைக் காட்டுகிறது” என்று கூறினார்.
மகா கும்பமேளாவிற்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, “இன்று, இந்த அவையின் மூலம், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்… மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பலர் பங்களித்துள்ளனர். அரசாங்கம் மற்றும் சமூகத்தின் அனைத்து கர்மயோகிகளையும் நான் வாழ்த்துகிறேன்… நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கும், உ.பி. மக்களுக்கும், குறிப்பாக பிரயாக்ராஜ் மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.
இருப்பினும், மோடி தனது உரையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையோ அல்லது மாநில அரசையோ குறிப்பாகக் குறிப்பிடவில்லை, ஜனவரி மாதம் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தது பற்றியும் அவர் பேசவில்லை.