மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பா.ஜ.க. இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் யுபிஐ (UBI) எனப்படும் மாதந்தோறும் அடிப்படை ஆதார ஊதியமாக அரசு ஒரு தொகையை அனைத்து மக்களுக்கும் வழங்குவதாக சிக்கிம் முதல்வர் சாம்லிங் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.