காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் கோலாரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பா.ஜ.க-வின் சூரத் மேற்கு எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் சூரத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு, சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி-யாக பதவியில் அமர்த்த காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து அவர் மீண்டும் எம்.பி-யாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை மக்களவை செயலகத்தில் நேற்று சனிக்கிழமை அளித்தார்.
இது குறித்து காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், வெள்ளிக்கிழமை இரவு சபாநாயகரை தொடர்பு கொண்டேன். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை ஒப்படைக்க விரும்புவதாகவும், எங்கள் கடிதத்தையும் சமர்ப்பிக்க விரும்புவதாகவும் அவரிடம் கூறினேன். அவரைச் சந்திக்க நேரம் தேடினேன். அவர் என்னை சனிக்கிழமை சந்திப்பதாகச் சொன்னார்.
சனிக்கிழமை காலை அவருக்கு மீண்டும் போன் செய்து பேசினேன். மக்களவை பொதுச்செயலாளரைத் தொடர்பு கொண்டு ஆவணத்தை அவரது அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார். பின்னர் பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டேன். இன்று விடுமுறை என்பதால் அவரது அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். நான் யாரிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதை சபாநாயகரிடம் கொடுக்கச் சொன்னார். சபாநாயகர் அலுவலகம் மூலம் அவரைச் சென்றடையும் என்றார்.
குறைந்த பட்சம் கடிதத்தையாவது பெற்றுக்கொள்ளுமாறு நான் பொதுச்செயலாளரிடம் கூறினேன். விடுமுறை என்று சொன்னார். விடுமுறை என்றால் என்ன? அவசரச் சூழ்நிலைகளில் கடிதத்தைப் பெற சில அமைப்பு இருக்க வேண்டும். அமைப்பு உள்ளது என்றார். டக் (போஸ்ட்) சிஸ்டம் இருப்பதாகக் கூறி, கடிதம் மற்றும் ஆர்டருடன் யாரையாவது அனுப்பச் சொன்னார். நான் கடிதம் அனுப்பினேன். ஒரு துணைச் செயலாளர் அதைப் பெற்றார். அவர் கையெழுத்திட்டாலும், சீல் வைக்கப்படவில்லை.
ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில், சபாநாயகர் மற்றும் அவரது அலுவலகத்திற்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர் சபைக்கு திரும்புவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதுதான். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி சபாநாயகருக்கு எழுதிய கடிதம் ஆகிய மூன்று ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்.
எனது கட்சி சார்பாக, விதிகளின்படி தேவையான அனைத்தையும் செய்துள்ளேன். ராகுல் காந்தி எந்த வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ, அதே வேகத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும்." என்று கூறினார்.
ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி ஆக்குவது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகரை குற்றம் சாட்டுகிறாரா அல்லது வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் கூறுகிறாரா என்று கேட்டதற்கு, "சபாநாயகரை குற்றம் சாட்டும் எண்ணம் எனக்கு இல்லை. சபாநாயகர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் எங்களின் உரிமைகளை மட்டுமே கேட்கிறேன். நான் தனி வசதி எதுவும் கேட்கவில்லை. நான் வேறு எதையும் கேட்கவில்லை.
இப்போது முடிவெடுப்பது சபாநாயகர் மற்றும் பொதுச் செயலாளரிடம் உள்ளது. அவர்கள் ஆலோசனை பெற விரும்பினால். சட்ட அமைச்சரிடம் ஆலோசிக்கவும் அவர்களால் முடியும். ஆனால் வார விடுமுறைக்குப் பிறகு சபை கூடும் திங்கட்கிழமைக்கு முன் காந்தியை மீண்டும் பதவியில் அமர்த்தலாம். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த அலட்சியம், அப்போது நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவரது வீட்டைக் காலி செய்யச் சொன்ன நாள், அன்றும் விடுமுறை, இன்றும் விடுமுறை.
எந்த சந்தேகமும் இல்லை. நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அது (மீண்டும் பதவி வழங்குதல்) இதுவரை நடக்காததால், நாங்கள் சற்று அமைதியின்றி இருக்கிறோம். இது ராக்கெட் அறிவியலோ, அணு அறிவியலோ, செயற்கைக்கோள் அறிவியலோ அல்ல. சில நொடிகளில் உத்தரவு பிறப்பிக்கலாம். அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான கடிதத்தை அவர்கள் எழுத வேண்டும்." என்று கூறினார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று சனிக்கிழமை மாலை மீண்டும் பொதுச்செயலாளர் உத்பால் குமார் சிங்கை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் லைனில் வரவில்லை என்றும் கூறினார். இதனால் கோபமுற்ற அவர் இது தொடர்பாக இன்று 'தி எக்ஸ்பிரஸ்ஸிடம்' பேசுகையில், “பாராளுமன்ற நடைமுறைகள், விதிகள் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்த உடனடி மற்றும் அதிகாரபூர்வமான ஆலோசனையை உறுப்பினர்கள் எப்போதும் பொதுச்செயலாளரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவர் என்னிடம் பேச வராதது விசித்திரமானது. மிகப் பெரிய எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்காமல் இருக்க அதிகாரி துணிச்சலைக் காட்டுகிறார். பிறகு நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை.
இருப்பினும், உத்பால் குமார் சிங் இரவு 10.30 மணியளவில் என்னிடம் பேசினார். நாங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் செயலகத்தில் உள்ளது என்று அவர் என்னிடம் கூறினார். கூடிய விரைவில் ராகுல் காந்தியை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு அவரிடம் கூறினேன்." என்று அவர் கூறினார்.
இதனிடையே, ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி பதிவில் அமர்த்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 26 மணி நேரத்திற்குப் பிறகு, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது முற்றிலும் நியாயமற்ற தண்டனையை என உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து 26 மணிநேரம் கடந்துவிட்டது. அவரது எம்பி பதவியை ஏன் இன்னும் மீட்டெடுக்கவில்லை? ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்பதற்கு பிரதமர் பயப்படுகிறாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளதாக மக்களவைச் செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வெளியே பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், திங்கள்கிழமை "கோரிக்கை ஆராயப்படும்" என்று தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி மீண்டும் சபைக்கு வந்து ஆகஸ்ட் 8-ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.