குடியரசு தின விழாவில் ராகுல் காந்திக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆனாலும் விழாவில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி.
குடியரசு தின விழா அணி வகுப்பு டெல்லியில் நாளை (ஜனவரி 26) நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்துகொண்டு அணி வகுப்பை பார்வையிட்டு பேசுகிறார். ஆசியக் கண்டத்தை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக இதில் பங்கேற்கிறார்கள்.
குடியரசு தினவிழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தை மேற்கோள் காட்டி, பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து காங்கிரஸ் தலைவருக்கு குடியரசு தின விழாவில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. சோனியா காந்திக்கும் ஒவ்வொரு ஆண்டும் அப்படியே இடம் ஒதுக்கியிருந்தார்கள். ஆனால் ராகுல் காந்திக்கு அப்படி ஒதுக்காதது பாஜக.வின் மலிவான அரசியலை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
ஆசியக் கண்ட நாடுகளின் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தியை அவமதிக்கும் நோக்குடன் இந்த வேலையை மத்திய அரசு செய்வதாகவும் குற்றம் சாட்டினார் அவர். ஆனாலும் ராகுல் காந்தி விழாவுக்கு செல்ல இருப்பதாகவும் அந்தத் தலைவர் குறிப்பிட்டார்.
நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு குடியரசு தின விழாவில் முதல் வரிசையிலேயே இடம் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே பிடிஐ வெளியிட்ட தகவல்படி, ராகுலுக்கு 4-வது இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டால் அரசியல் ரீதியாக சர்ச்சை உருவாகலாம்.