மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் பத்து சதவிகிதத்தை விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைய, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வென்றார்.
காங்கிரஸின் இந்த மெகா தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனையடுத்து, ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நாட்டின் கொள்கை மற்றும் மதிப்பிற்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.
கட்சியின் அடுத்தத் தலைவரை நானே முன்மொழிய வேண்டும் என்று கட்சியினர் என்னிடம் வலியுறுத்தினர். ஆனால், அவ்வாறு நான் தேர்வு செய்வது முறை ஆகாது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
July 2019
புதிய தலைவரை தேர்வு செய்ய அவர்களுக்கு நான் அதிகாரம் அளித்துள்ளேன். சுமூகமான மாற்றத்துக்கு எனது முழு ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளேன். எனது போராட்டம் அதிகாரத்துக்கு மட்டுமானதல்ல. எனக்கு பாஜக மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா பற்றிய அவர்களின் கருத்தை உளமார எதிர்க்கிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராக, 90 வயது நிரம்பிய காங்கிரஸ் கட்சியின் மிக மூத்தத் தலைவரான மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1928ஆம் ஆண்டு பிறந்த மோதிலால் வோரா, கொல்கத்தாவில் கல்வி கற்றவர். கடந்த 1968ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, பின்னர் 1970ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1972ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
பிரதமர் அர்ஜூன் சிங்கின் அமைச்சரவையில் உயர்கல்வித் துறை இணை அமைச்சராக பதவி வகித்த வோரா, 1983ல் மத்திய அமைச்சராக உயர்வுப் பெற்றார். பிறகு, 1985ல் மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் 3 ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்து, 1988ல் மாநிலங்களவை உறுப்பினரானார்.
விரைவில், மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.