சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்துகொண்ட இரவு விருந்தில் பங்கேற்ற சரத் பவார், சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வி.டி. சாவர்க்கரை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இந்த விவகாரத்தில் சிவசேனாவின் கவலையை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்து சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா இடையே சலசலப்புக்கு வழிவகுத்த சாவர்க்கர் மீதான விமர்சனத்தை குறைத்துக்கொள்ள காங்கிரஸ் ஒப்புக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திங்கள்கிழமை மாலை கூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் இந்த விவகாரத்தை எழுப்பினார். மேலும், மகாராஷ்டிராவில் மரியாதைக்குரிய நபரான சாவர்க்கரை குறிவைப்பது மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உதவாது என்று தெளிவுபடுத்தினார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சாவர்க்கர் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்ததில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறிய சரத் பவார், எதிர்க்கட்சிகளின் உண்மையான போராட்டம் பிரதமர் நரேந்திர மோடியுடனும் பா.ஜ.க-வுடனும்தான் என்பதை வலியுறுத்தினார்.
ராகுல் காந்தி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அவர் இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க ராகுல் காந்தி மீதான தாக்குதலை முடுக்கிவிட்ட நிலையில், வயநாட்டைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என்றும் நான் மன்னிப்பு கேட்க மாடேன் என்றும் கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்த கூடத்திற்கு ஒப்புக்கொண்டிருந்த நிலையில், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த கூட்டத்தை தாக்கரே பிரிவு சிவசேனா புறக்கணித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“