பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அரசியல் சாசனத்தை திருட்டுத்தனமாக சிதைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது தலைவர்கள் அம்பேத்கர் முன்னாள் கை கூப்பி வணங்குகிறார்கள். ஆனால் பின்னால் முதுகில் குத்துகிறார்கள் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதையே செய்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். நீதித்துறை, ஊடகங்கள், ராணுவம் உட்பட நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் சங் அமைப்பு ஊடுருவியுள்ளது என்று கூறினார்.
ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அம்பேத்கரின் பிறந்த இடமான மோவில் அரசியலமைப்பு தினத்தையொட்டி, பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய ராகுல். அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டுமல்ல, அது உயிருள்ள ஒரு சக்தி, சிந்தனை மற்றும் குரல். இந்த சக்தியை “அழிக்க” ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது என்று விமர்சித்தார்.
ஆர்.எஸ்.எஸ் – 52 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றவில்லை
“மூவர்ணக் கொடியானது அரசியல் சாசனத்தில் இருந்து பலம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றியதில்லை என்றார். தொடர்ந்து மேடையில் இருந்து நடந்து சென்று அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ராகுல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) முதலில் இதை செய்வார்கள். அம்பேத்கரின் முன் கைகளை கூப்பி வணங்குவார்கள். பின்னர் அரசியலமைப்பை அழித்து அதை கிழிக்க முயற்சிக்கிறார்கள். அரசியலமைப்பிற்காக பாபாசாகேப் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இது அவர்களின் முறை. அவர்களால் ஒருபோதும் அம்பேத்கரை வெளிப்படையாக அவமதிக்க முடியாது. காந்தியிடமும் அதையே செய்கிறார்கள். காந்தி சொன்ன செய்தி என்ன? பயப்பட வேண்டாம், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார். ஆர்எஸ்எஸ்காரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? முன்பு அவர்கள் காந்தியை வணங்க மாட்டார்கள். பதிலுக்கு கோட்சே முன்னாள் கைகளைக் கூப்பினார்கள் (ஆனால்) இன்று அவர்கள் (காந்தியின் முன் வணங்கிட) கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் காந்தி சிலை முன்பு கைகளை கூப்பி, பின்னர் அவரது அகிம்சை செய்தியை அழிக்கிறார்கள்.
என் உள்ளம் அன்பால் நிறைந்துள்ளது
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் அரசியல் சாசனத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது, அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. அவர்கள் அதைச் செய்ய முயற்சிக்கும் நாளில், இந்தியாவின் ஒட்டுமொத்த குரல் அவர்களைத் தடுக்கும். எனவே அவர்கள் திருட்டுத்தனமாக செய்கிறார்கள்” என்றார்.
லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டசபைகள், நீதித்துறை, அதிகாரத்துவம், ஊடகங்கள் போன்ற அமைப்புகள் அரசியல் சாசனத்தில் இருந்து உருவாகின்றன என்று கூறிய ராகுல், இன்று ஆர்.எஸ்.எஸ், நீதித்துறை, ஊடகங்கள், ராணுவம் என அனைத்து அமைப்புகளிலும் தங்கள் ஆட்களை நியமித்து வருகிறது. அவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் – அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்பது தான்.
“என் பாட்டி 32 முறை சுடப்பட்டார். எனது தந்தை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். எனக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனாலும் என் உள்ளத்தில் பயம் இல்லை, அன்பால் நிரம்பியுள்ளது” என்றார்.
அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்
“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசுகையில், எனக்கு மோடி அல்லது ஆர்.எஸ்.எஸ் மீது வெறுப்பு இல்லை. ஏனெனில் என் மனதில் எந்த பயமும் இல்லை. பயம்தான் வெறுப்பையும் பிரிவையும் உருவாக்குகிறது. எனவே நான் பா.ஜ.க, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் சொல்வேன். கோதரர்களே, அச்சத்தை களையுங்கள்; உங்கள் வெறுப்பு மறைந்துவிடும்; உங்கள் பயம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
கார்கே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து கடுமையாக விமர்சித்தார், அதன் தலைவர்கள், மதத்தை நாட்டிற்கு மேலே வைக்க முயற்சிக்கின்றனர். அனைவரும் தங்கள் மதம், ஜாதியை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட வேண்டும் என்று பேசினார்.
கார்கே தனது உரையில், “டாக்டர் பி.ஆர் அம்பேத்கர், குடியரசுத் தலைவரிடம் அரசியல் சாசனத்தை ஒப்படைக்கும் போது, வெளியில் உள்ள எதிரிகளைத் தவிர, நாட்டிற்குள் எதிரிகளாக இருக்கும் பல்வேறு அரசியல் பிரிவுகளை நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்று கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அப்போது ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாட்டையும், இதிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இந்த பல்வேறு அரசியல் பிரிவுகளின் நலன்களுக்கு மேலாக தேசத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
கார்கே கூட்டத்தில் பேசுகையில், “நாம் அனைவரும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், இல்லையெனில் நாம் மீண்டும் அடிமைகளாகிவிடுவோம் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியலமைப்பை அழிவின் பாதைக்கு கொண்டுவர விரும்புகின்றன, ஆனால் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழிக்க நான் விட மாட்டோம். ஒரு சிறிய தவறால் நம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உரிமையை இழக்க நேரிடும்” என்றார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று யாத்திரையில் ராகுலுடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அமைச்சர் டிஎஸ் சிங் தியோ பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டனர்.
நேற்று அரசியலமைப்பு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் கார்கே மத்திய பா.ஜ.க அரசை கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil