Advertisment

பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு மீறல்; அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜ.க தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த உளவுத்துறையினர் பாரத் ஜோடோ யாத்திரை ஹரியானா வழியாகச் சென்றபோது, யாத்திரை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்ததாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

author-image
WebDesk
New Update
rahul gandhi, bharat jodo yatra, pawan khera, amit shah, delhi, ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை, பாதுகாப்பு மீறல், காங்கிரஸ், bharat jodo yatra in delhi, political pulse, mallikarjun kharge, Tamil indian express news

பாரத் ஜோடோ யாத்திரை கடந்த வாரம் தேசிய தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தபோது, யாத்திரையில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மீறல்கள் நடந்ததாகவும், நடை பயணத்தை வழிநடத்தும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வலையத்தை பராமரிக்க டெல்லி காவல்துறை தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் புதன்கிழமை கடிதம் எழுதியது.

Advertisment

இசட் பிளஸ் வகை பாதுகாப்பை கொண்ட ராகுல் காந்தியின் பாதுகாப்பையும் பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 24-ம் தேதி டெல்லிக்குள் நுழைந்தபோது, பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டது. மேலும், பெரிய அளவிலான கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பைக் கொண்ட ராகுல் காந்தியைச் சுற்றி ஒரு அடுக்கு பாதுகாப்பு அரண் பராமரிப்பதிலும் டெல்லி காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்தது. ராகுல் காந்தியுடன் நடந்து சென்ற காங்கிரஸ் தொண்டர்களும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர்களும் பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டிய அளவுக்கு நிலைமை கடுமையாக இருந்தது. அதே சமயம், டெல்லி போலீசார் வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர்” என்று கே.சி. வேணுகோபால் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

யாத்திரையில் பங்கேற்பாளர்களைத் துன்புறுத்தவும், பாரத் ஜோடோ யாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் சேரவிடாமல் தடுக்கவும் புலனாய்வு துறை பல பங்கேற்பாளர்களை விசாரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஹரியானா மாநிலம் சோஹ்னா நகர காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி காங்கிரஸ் புகார் அளித்தது.

பா.ஜ.க தலைமையிலான ஹரியானா அரசாங்கத்தைச் சேர்ந்த உளவுத்துறையினர் பாரத் ஜோடோ யாத்திரை ஹரியானா மாநிலம் வழியாகச் சென்றபோது, யாத்திரையின் முகாம் ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்ததாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியப் பிரதேசம் முழுவதும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் நடமாடுவதற்கும் அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை என்பது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரும் ஒரு பாத யாத்திரை. அரசாங்கம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல், காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கே.சி. வேணுகோபால் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள் மற்றும் 2013-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது சம்பந்தமாக, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிற ராகுல் காந்தி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையில் சேரும் மக்கள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.

தற்போது 9 நாள் ஓய்வில் உள்ள யாத்திரை, மீண்டும் ஹரியானாவில் நுழைவதற்கு முன், ஜனவரி 3-ம் தேதி உத்தரபிரதேசத்தில் மீண்டும் தொடங்கும், அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment