காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தற்போது அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல யூடியூபர் கமியா ஜானியாவுக்கு நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலின்போது, “சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அன்பான அறிவாளி..
இது குறித்து மேலும் அவர், “என்னுடைய விருப்ப பட்டியலில் “அன்பான அறிவாளி” இருக்கிறார். எனது பெற்றோர் மிகவும் அழகான திருமணத்தை நடத்தினார்கள்.
நான் திருமணத்தை நேசிக்கிறேன். எனது விருப்பம் எனக்கு தடையாக இருக்கிறது என்று கருதுகிறேன்” என்றார்.
தொடர்ந்து அந்த யூடியூபர் ராகுல் காந்தியின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து வினாயெழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “தமக்கு பட்டாணி மற்றும் பலாப் பழம் பிடிக்காது” எனப் பதில் அளித்தார்.
சரவண பவன் உணவு
மேலும், “தமக்கு அசைவ உணவுகளில் நாட்டம் அதிகம் எனக் கூறிய ராகுல் காந்தி டெல்லி மோதி மஹால், ஸ்வகத் மற்றும் சரவண பவன் உள்ளிட்ட இடங்களில் சாப்பிட விரும்புவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி தமது வீட்டில் கட்டுக்கோப்பான உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும், தெலங்கானாவில் உணவு உண்ண சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வளவு காரமான உணவுப் பொருள்களை உண்டதில்லை” என்றார்.
இத்தாலியில் சைக்கிள் ஓட்டிய நாள்கள்
விருப்பமான பொழுதுபோக்குகள் குறித்த பேசிய ராகுல் காந்தி, “தமக்கு ஸ்கூபா டைவிங், சைக்கிள் ஓட்டுதல், பேக் பேக்கிங் மற்றும் தற்காப்புக் கலைகள் ஆகியவை பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து தாம் இத்தாலியில் சைக்கிள் ஓட்டியதையும் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார்.
மேலும் தாம் ஜப்பானிய தற்காப்பு கலையான ஐகிடோவில் பிளாக் பெல்ட் என்பதையும் கூறினார். தொடர்ந்து தனது கல்லூரி காலங்களில் குத்துச் சண்டை போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வேன் என்றார்.
முதல் சம்பளம்
பின்னர் தனது முதல் சம்பளம் குறித்த நினைவலைகளையும் பகிர்ந்துகொண்டார். அப்போது, தன்னுடைய 24-25ஆம் வயதுகளில் தாம் லண்டனில் பணிபுரிந்ததாகவும் அங்கு 3,000 பவுண்டுகள் சம்பளம் பெற்றேன்” எனவும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/