காலை 11.46: காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி மக்களுக்காக செயல்படும் எனவும், வருங்காலத்தில் இந்தியா முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் எனவும் கூறினார்.
காலை 11.30: ” காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு எனது ஆசீர்வாதமும் வாழ்த்துகளும்.”, என சோனியாகாந்தி வாழ்த்துரை கூறினார்.
காலை 11.16:”காங்கிரஸ் வரலாற்றில் இன்று முக்கியமான நாள். இது உணர்ச்சிமிக்க தருணமாக உள்ளது. 19 ஆண்டுகளாக தலைவராக இருந்த சோனியா காந்தி பல முக்கிய வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளார்."என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.
காலை 11.07:காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை, தேர்தல் குழுத் தலைவர் முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இதையடுத்து, காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். "இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம்”, என முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.
காலை 11.01:ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் விழா துவங்கியது. விழாவில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
காலை 10.32: ராகுல் காந்தி பதவியேற்பதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பதவியேற்கிறார். அதன்மூலம், 19 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்த சோனியா காந்தி ஓய்வு பெறுகிறார். நாடாளுமன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “நான் ஒய்வு பெறுவதுதான் என்னுடையை பணி”, என கூறினார்.
இருப்பினும், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மட்டுமே சோனியா காந்தி ஓய்வு பெறுவதாகவும், ஆனால், கட்சியின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் அவர் நீடிப்பார் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவிக்கையில், கட்சியினருக்கு சோனியா காந்தி தாயாக இருந்து வழிநடத்த வேண்டும் என கூறினார்.
காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த வேளையில் ராகுல் காந்தி அதன் தலைவராக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/rahul-sonia-759-1-230x300.jpg)