Advertisment

டி.ஆர்.எஸ் உடன் எந்த உறவும் இல்லை... குஜராத்தில் ஆம் ஆத்மி ஊடகங்களில் மட்டுமே உள்ளது - ராகுல் காந்தி

பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என பெயர் மாற்றப்பட்டுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் எந்த விதமான உறவையும் ஒருபோதும் வைத்துக் கொள்ளாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
Oct 31, 2022 19:53 IST
டி.ஆர்.எஸ் உடன் எந்த உறவும் இல்லை... குஜராத்தில் ஆம் ஆத்மி ஊடகங்களில் மட்டுமே உள்ளது - ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமைப் பயணமான பாரத் ஜாடோ யாத்திரையையொட்டி, கோத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ஆளும் தெலுங்கானா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். டி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் தேசிய நோக்கங்கள் குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்: “தெலுங்கானா முதல்வர் தேசிய கட்சியை நடத்துகிறார் என்று நம்பினால், அவர் அதைச் செய்யட்டும். அவர் ஒரு உலகளாவிய கட்சியை நடத்துகிறார் என்று அவர் நம்பினால், அதுவும் நல்லது. அவர் ஒரு சர்வதேச கட்சியை நடத்துகிறார் என்று கற்பனை செய்வது வரவேற்கத்தக்கது. அது அமெரிக்காவிலோ அல்லது சீனாவிலோ அல்லது பிற நாடுகளிலோ தேர்தலில் போட்டியிடலாம். அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். பி.ஆர்.எஸ் கட்சி எங்கே போட்டியிட விரும்பினாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பி.ஆர்.எஸ் கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாருடன் பேசினாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஊழல், அணுகுமுறை மற்றும் பி.ஆர்.எஸ் அணுகுமுறையுடன் நாங்கள் நிற்க முடியாது.” என்று ராகுல் காந்தி கூறினார்.

Advertisment

காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கானாவில் பாரத் ஜாடோ யாத்திரையின்போது ராகுல் காந்தி டி.ஆர்.எஸ்-க்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். நெசவாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள், எனப் பல தரப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துக் கருத்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், “மாநிலத்தில் டி.ஆர்,எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க-வின் கொள்கைகளால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று ராகுல் காந்தி கூறினார்.

தெலுங்கானா அரசு எஸ்சி, எஸ்டி மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறது. பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறது. கல்வி முறையை தனியார்மயமாக்கி அழிக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று ராகுல் காந்தி கூறினார். “மசோதாக்களை நிறைவேற்றுவதில் டி.ஆர்.எஸ் மத்தியில் உள்ள பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்துள்ளது. இரண்டு கட்சிகள்உம் ஜனநாயக விரோதமான கட்சிகள். அரசியல் கட்சிகளை விட வணிக நிறுவனங்களாக இணைந்து செயல்படுகின்றன. மேலும், மக்களை முற்றிலுமாக புறக்கணிக்கின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.

தெலுங்கானவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில், திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க மற்றும் டி.ஆர்.எஸ் தேர்தல்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். “இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி. வெளிப்படையாக, இது ஊழலில் இருந்து வருகிறது. இந்த பணம் அப்பட்டமாக விநியோகிக்கப்படுகிறது.” என்று கூறினார்.

குஜராத் தேர்தலில் காங்கிரஸின் வாய்ப்புகள் குறித்து கேட்டதற்கு, தனது கட்சி வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) மாநிலத்தில் விளம்பரங்களின் அடிப்படையில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது என்றும், ஆனால் களத்தில் ஆதரவு இல்லை என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி கூறியதாவது: குஜராத் தேர்தலில் காங்கிரஸ் திறம்பட போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஊடகங்களில் மட்டுமே உள்ளது… ஆம் ஆத்மி கொடுத்த விளம்பரங்களின் அடிப்படையில் ஊடகங்கள் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளன… களத்தில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கூறினார்.

மோர்பியில் பாலம் இடிந்து 130-க்கும் மேற்பட்டோர் பலியான துயர நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பாததால் அது பற்றி பேச மாட்டேன் என்று கூறினார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் முக்கிய அம்சம் என்று காங்கிரஸ் கூறியதை மீண்டும் கூறிய ராகுல், இன்று இந்தியாவில் நடக்கும் சண்டை இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையான சண்டை – ஒரு சித்தாந்தம் தேசத்தைப் பிளவுபடுத்துவது, வன்முறையைப் பரப்புவது, மற்றொன்று தேசத்தை ஒன்றிணைப்பது இது மிகவும் தெளிவாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் நானும் கருதுகிறோம்.

இந்திய ஒற்றுமை யாத்திரை நிச்சயமாக ஒரு அரசியல் செயல் என்று ராகுல் காந்தி கூறினார். “இது விளையாட்டு யாத்திரை அல்ல. இது பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் நாட்டைப் பிளவுபடுத்தும் விதம், நாட்டை சேதப்படுத்தும் விதத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கை” என்று கூறினார்.

காங்கிரஸ் மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் ஒரு ஜனநாயகக் கட்சி என்று அவர் கூறினார். “நாங்கள் சர்வாதிகாரக் கட்சி நடத்தவில்லை என்பது எங்கள் டி.என்.ஏ-வில் உள்ளது. சமீபத்தில் ஜனநாயக முறையில் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தோம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பி.ஆர்.எஸ் போன்ற கட்சிகள் எப்போது தங்கள் தலைவர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தும் என்று தெரியவில்லை. ஊடகங்கள் எப்போதுமே காங்கிரஸில் தேர்தல் பற்றிக் கேட்கின்றன. ஆனால், பா.ஜ.க-வையோ அல்லது டி.ஆர்.எஸ்-ஸையோ கேள்வி கேட்கத் துணிவதில்லை” என்று கூறினார்.

#Rahul Gandhi #Congress #Telangana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment