குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆசிரியர் சமூகத்தினரிடையே பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தன் கடினமான சூழ்நிலையை பகிர்ந்துகொண்ட பேராசிரியரை ஆதரவுடன் அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, ஆசிரியர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ராகுல்காந்தியிடம் தெரிவித்தார்.
அப்போது, பி.எச்.டி. பட்டம் பெற்று பகுதிநேர விரிவுரையாளராக உள்ள ரஞ்சனா அவாஸ்தி என்பவர், தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கலங்கிய குரலில் தெரிவித்தார். ஓய்வு பெறும் காலகட்டத்தை நெருங்கியுள்ள ரஞ்சனா மேலும் பேசுகையில், குறைந்த ஊதியம் வழங்குவதாகவும், மருத்துவ கால விடுமுறை, பேறு கால விடுமுறை கூட அளிப்பதில்லை எனவும், ஓய்வூதியம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சிக்கு வந்தால் இப்பிரச்சனைகளை களைய தீர்வினை வைத்துள்ளதா என்வும் அவர் கேள்வி எழுப்பினார்.
மிகவும் கலங்கிய குரலில் ரஞ்சனா பேசி முடித்தபின் ராகுல் காந்தி, ”சில பிரச்சனைகளுக்கு வார்த்தைகளால் தீர்வு கூற முடியாது”, எனக்கூறினார். அதன்பின், ரஞ்சனா அமர்ந்துள்ள இருக்கைக்கு சென்று அவரை அரவணைத்து தேற்றினார் ராகுல் காந்தி. இச்செயல், அவரின் தலைமை பண்பை மேலும் உயர்த்துவதாக உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்பின், பொது கல்வி, மற்றும் பொது சுகாதாரத்தில் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்தும் என வாக்குறுதி அளித்தார்.