பிரிவினையால் அப்பாவை இழந்த நான் நாட்டை இழக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக தமிழகம் வந்த அவர் இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவர் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து அவர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு வருகை தருகிறார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி சென்றடைகிறார்.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னையிலிருந்து முதல்வர் கன்னியாக்குமரிக்கு புறப்பட்டார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். “வெறுப்பு மற்றும் பிரிவினையால் எனது அப்பாவை நான் இழந்தேன். ஆனால் நான் நேசிக்கும் நாட்டை இழக்க மாட்டேன்.அன்பு வெறுப்பை வீழ்த்தும். நம்பிக்கை பயத்தை வீழ்த்தும். நாம் ஒன்றாக எல்லாவற்றையும் கடந்து வருவோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.