அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதான தாக்குதலை முடுக்கிவிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மக்களவையில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்காமல், அவரது குடும்பப் பெயரைப் பற்றி பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மோடிக்கும் கெளதம் அதானிக்கும் இடையே "பிணைப்பு" இருப்பதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு இது தொடர்பான தனது கருத்துக்களை ஆதரிக்க "தேவையான ஆதாரத்துடன்" கடிதம் எழுதியுள்ளதாகவும், இருப்பினும் அவை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டன என்றும் கூறினார். பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக பா.ஜ.க உறுப்பினர்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: அதானி விவகாரம்; குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்; குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக செபி அறிவிப்பு
தனது லோக்சபா தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது குடும்பப்பெயரை குறிப்பிட்டு தன்னை "நேரடியாக அவமதித்த" மோடியின் கருத்தை ஏன் நீக்கவில்லை என்று கேட்டார். மேலும், “உங்கள் பெயர் ஏன் நேரு என்று இல்லாமல் காந்தி என்று உள்ளது என மோடி கேட்கிறார். எனவே நாட்டின் பிரதமர் நேரடியாக என்னை அவமதித்தாலும் அவரது வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் உண்மை எப்போதும் வெளிவரும்” என்று ராகுல் காந்தி கூறினார்.
ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்த மோடி, “ஜவஹர்லால் நேருவை எங்காவது குறிப்பிடத் தவறினால், அவர்கள் (காங்கிரஸ்) வருத்தப்படுவார்கள். நேரு அவ்வளவு பெரிய மனிதர் என்றால், பிறகு ஏன் அவர்களில் யாரும் குடும்பப் பெயராக நேரு என்பதைப் பயன்படுத்துவதில்லை? நேரு பெயரை பயன்படுத்துவதில் என்ன அவமானம் இருக்கிறது?,” என்று கேட்டு இருந்தார்.
வயநாடு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,: பிரதமரிடம் சில கேள்விகள் கேட்டேன். திரு அதானி உடனான உறவைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதானி எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தார் என்று கேட்டேன். ஒரு கேள்விக்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை. நீங்கள் ஏன் நேரு என்று அழைக்கப்படுவதில்லை, ஏன் காந்தி என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று எனது கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஏனென்றால் பொதுவாக இந்தியாவில்... ஒருவேளை திரு மோடிக்கு இது புரியாமல் இருக்கலாம்... ஆனால் பொதுவாக இந்தியாவில் நமது குடும்பப்பெயர் நமது தந்தையின் குடும்பப்பெயராக இருக்கும்,” என்று கூறினார்.
இதற்கு நேர்மாறாக, எனது கருத்துக்கள் நீக்கப்பட்டன என்று ராகுல் கூறினார், இருப்பினும், “நான் மிகவும் கண்ணியமான, மரியாதைக்குரிய தொனியில் பேசினேன். நான் எந்த கெட்ட வார்த்தையும் பயன்படுத்தவில்லை. நான் யாரையும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. நான் சில உண்மைகளை எழுப்பினேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பேசும் போது, தனது உடல் மொழியையும், பிரதமரின் உடல் மொழியையும் மக்கள் கவனிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நான் பேசும் போது என் முகத்தைப் பார்ப்பதும், அவர் பேசும்போது அவர் முகத்தைப் பார்ப்பதும்தான். எத்தனை முறை தண்ணீர் குடித்தார், தண்ணீர் குடிக்கும் போது கை எப்படி நடுங்குகிறது என்று பாருங்கள், உங்களுக்கு எல்லாம் புரியும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
அனைவரும் பயப்பட வேண்டிய வலிமையான மனிதராக மோடி தன்னைக் கருதலாம் என்றும் ராகுல் கூறினார். “நான் கடைசியாக பயப்படுவது நரேந்திர மோடிதான் என்பதை அவர் உணரவில்லை. அவர் பிரதமரா என்பது முக்கியமில்லை, அவருக்கு அனைத்து ஏஜென்சிகளும் இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஏனென்றால் உண்மை அவர் பக்கம் இல்லை. ஒரு நாள் அவர் தனது உண்மையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
சபையில் அவர் ஆற்றிய உரை குறித்து பேசிய ராகுல் காந்தி, ”திரு அதானி பிரதமருடன் வெளிநாடுகளுக்கு எப்படி பயணம் செய்தார் என்பதை நான் சுட்டிக்காட்டினேன், அதன் பிறகு உடனடியாக, அந்த நாடுகளில் இருந்து வெகுமதியாக ஒப்பந்தங்களைப் பெற்றார். இன்று 30% விமானப் போக்குவரத்தை திரு அதானி எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதை நான் வெளிப்படுத்தினேன், ஏனெனில் அவருக்கு பிரதமருடன் தொடர்பு உள்ளது... திரு அதானி இந்த விமான நிலையங்களைப் பெறுவதற்கு விதிகள் எவ்வாறு மாற்றப்பட்டன என்பதைப் பற்றி பேசினேன். முன்னதாக விமான நிலையங்களை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் திரு அதானி பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. NITI ஆயோக், மற்ற நிறுவனங்கள் அவரை அனுமதிக்கக்கூடாது என்று கூறியது, ஆனால் அவர் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்,” என்று கூறினார்.
”அதானி குழுமம் எப்படி பங்களாதேஷில் ஒப்பந்தங்களைப் பெற்றது மற்றும் இலங்கையில் மின் திட்டம், எஸ்.பி.ஐ-யிடம் இருந்து கடன் சலுகைகளைப் பெற்றது மற்றும் மும்பை விமான நிலையத்தை நடத்தியவர்களை ஏஜென்சிகள் அச்சுறுத்தியதை அடுத்து அதானி கையகப்படுத்தியது என்பது குறித்து ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தினார்.” அதானி, “அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், நிலக்கரி ஒப்பந்தங்கள், சுரங்க ஒப்பந்தங்கள், சாலை ஒப்பந்தங்கள், விவசாயம்... என அனைத்து துறைகளையும் பெற்றுள்ளார், திரு அதானி ஏகபோக உரிமை பெற உள்ளார். வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்கள் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அனுப்புகின்றன, இந்த ஷெல் நிறுவனங்கள் யாருடையது என்பது யாருக்கும் தெரியாது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
நாடாளுமன்றத்தில் இதே விஷயங்களைச் சொன்னபோது, அவரது பேச்சு ஏன் திருத்தப்பட்டது, ஏன் “சபையின் குறிப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை” என்று கேட்டதற்கு, ராகுல் காந்தி, “வெளிப்படையாக அதானி மற்றும் அம்பானி பெயரைச் சொல்வது இந்தியப் பிரதமரை அவமதிப்பதாகத் தெரிகிறது. ஆனால் இணையம் முழுவதும் அவர்கள் ஒன்றாக இருக்கும் படங்களை நீங்கள் பார்க்கலாம். திரு அதானியின் விமானத்தில் பிரதமர் பறப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர் அதானியின் விமானத்திற்குள் திரு அதானியுடன் சிரித்து ஓய்வெடுப்பதை நீங்கள் காணலாம். திரு அதானி பிரதமருடன் வெளிநாடுகளுக்கு தூதுக்குழுக்களில் பயணம் செய்கிறார். பிரதமர் வெளிநாடுகளில் இருக்கும் போது மாயமாக அந்த நாடுகளுக்கு சென்று விடுகிறார். மேலும், (நான்) சொன்னது எதுவும் பொய்யல்ல. இது அனைத்தும் உண்மையாக இருந்தது. யார் வேண்டுமானாலும் இணையத்தில் செல்லலாம், கூகுளுக்குச் சென்று நான் கேட்ட கேள்விகளைக் கேளுங்கள், நீங்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பீர்கள்,” என்று கூறினார்.
சபையின் விதிகள், "நீங்கள் ஆதாரமில்லாமல் ஏதாவது பேசினால் அல்லது யாரையாவது அவமதித்தால் ஒரு பேச்சின் பகுதிகளை (பாராளுமன்ற) பதிவுகளில் இருந்து நீக்கலாம்" என்று ராகுல் கூறினார். “நான் யாரையும் அவமதிக்கவில்லை. நான் கனிவான மொழியைப் பயன்படுத்தினேன், மிகவும் நாகரீகமான மொழியைப் பயன்படுத்தினேன், நான் சொன்னது அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையிலானது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
அதற்கான ஆதாரத்தையும் தற்போது அளித்துள்ளதாக கூறிய ராகுல் காந்தி, "சபாநாயகர் அவர்கள் நீக்கிய ஒவ்வொரு புள்ளி மற்றும் ஆதாரத்துடன் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்." என்று கூறினார்
இருப்பினும், தனது வார்த்தைகள் அவைக் குறிப்பில் மீண்டும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.