பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார். குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்யாமல், கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று (பிப்ரவரி 7) பேசினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மோடி, ‘நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் காரணம். தேர்தல் காரணத்திற்காக நாட்டை பிளவுபடுத்திவிட்டார்கள். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஜவகர்லால் நேரு காரணம் என்பது, வரலாறு தெரியாதவர்களின் கூற்று! பல மாநில அரசுகளை கலைத்த காங்கிரஸுக்கு ஜனநாயகம் மீது பற்று கிடையாது’ என காரசாரமாக சாடினார்.
மோடியின் உரை குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘பிரதமர் மோடி, தான் பிரதமர் என்பதையே மறந்துவிட்டார் என நினைக்கிறேன். எப்போதும் அவர் குற்றச்சாட்டுகளையே கூறிக்கொண்டிருக்க கூடாது. கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்’ என்றார் ராகுல்.
காங்கிரஸை தாக்கி நாடாளுமன்றத்தில் மோடி பேசியதற்கும் கண்டனம் தெரிவித்த ராகுல், ‘இதை அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பொதுக்கூட்டத்தில் பேசியிருக்க முடியும்’ என்றார். மேலும், ‘ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மக்களவையில் பேசிய மோடி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்தோ, விவசாயிகள் துயரம் குறித்தோ, இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்தோ பேச வில்லை’ என குறைபட்டார் ராகுல்.