கடந்த ஞாயிற்றுக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் இந்து மதத்தின் சாராம்சம் மற்றும் அதன் மையக் கோட்பாடுகளை பிரதிபலித்த ராகுல் காந்தி, இந்த வாரம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார், அங்கு அவர் சமூக சமையலறையில் சேவை செய்தார், பாலகி சாஹிப்பை தனது தோளில் சுமந்தார், லாங்கரில் ரொட்டிகளை பரிமாறினார் மற்றும் அவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Rahul Gandhi’s Golden Temple visit: Another chapter in his engagement with 1984
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சீக்கிய மதத்தின் முதன்மையான ஆன்மீக தளத்தில் ராகுல் காந்தி செலவிட்ட "தனிப்பட்ட" நேரம் காந்தி ஜெயந்தியுடன் ஒத்துப்போனது, ஆனால் நேரு-காந்தி குடும்பத்தின் அந்த மாதத்தின் அதிர்ச்சிகரமான நினைவுகள் யாராலும் மறக்கப்படவில்லை. அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால், வரலாறு அவரை பாதிக்கவில்லை என்றும், காந்தி ஜெயந்தி தினம் பொற்கோவிலில் சேவை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமான நாளாக அவர் கருதியதாகவும் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. விபாசனா தியானத்தின் தீவிர பயிற்சியாளர் உட்பட, அவர் ஆழ்ந்த ஆன்மீகம் கொண்டவர் என்பதை ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் சித்தரித்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எது எப்படியிருந்தாலும், 1984-ல் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான போராளிகளை விரட்ட, பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி எடுத்த முடிவு, அவரது படுகொலை மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், ராஜீவ் காந்தியின் “பெரிய மரம் விழுந்ததும், பூமி அதிருகிறது” என்ற கலவரம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்டவைகளுடன் கடந்த நான்கு தசாப்தங்களாக காங்கிரஸை ஆட்டிப்படைக்கிறது.
ராகுல் காந்தியின் தர்பார் சாஹிப் பயணத்தின் போது SGPC அவருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்த போதிலும், இதுவரை சீக்கியர் அல்லாத எந்த அரசியல் தலைவரும் பொற்கோவிலில் தங்கி இரண்டு நாள் சேவை செய்தது இல்லை என்பதால், அது 1984 ஆம் ஆண்டை நினைவுப்படுத்தியது மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொற்கோவிலில் தங்கியதன் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கியது.
தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில், சீக்கிய சமூகத்தினருடன் நெருக்கமாக ராகுல் காந்தி பலமுறை முயற்சித்துள்ளார், மேலும் தனது பாட்டியின் படுகொலையால் ஏற்பட்ட வலியைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை பேசியிருக்கிறார், அதேநேரம், இத்தகைய கடினமான பிரச்சினையில் சரியான கருத்தை தெரிவிக்க முயற்சிப்பதில் சில சமயங்களில் முரண்படுகிறார்.
இது ராகுல் காந்திக்கு மட்டுமல்ல. நடந்த கலவரத்திற்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட ஒரே சீக்கியப் பிரதமரான மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி நாட்டிற்குக் கொடுத்த போதிலும், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸை அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
அரசியலில் நுழைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2008-ல் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றபோது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் "தவறானது" என்றும், சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியது தான், இந்தப் பிரச்சினையில் அவர் முதன்முதலாகப் பகிரங்கமாக கருத்து தெரிவித்ததாகும்.
சீக்கியர்கள் மீது அவரது குடும்பத்தினர் ஒருபோதும் பகை கொண்டதில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார். “1984-ல் ஒரு சோகம் நடந்தது. என் அம்மாவும் அப்பாவும் யாருக்கும் விரோதமாக இருந்ததில்லை. 1977-ம் ஆண்டு தேர்தலில் என் பாட்டி தோல்வியடைந்தபோது, அவருக்குப் பலம் கொடுத்தது சீக்கியர்கள்தான்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
ஜனவரி 2013 இல், ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்தில் ராகுல் காந்தி தனது பாட்டியின் கொலையாளிகளான சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் ஆகியோரை பற்றி பேசினார், அங்கு அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கொலையாளிகள் இருவருடனும் "நண்பர்களாக" பேட்மிண்டன் விளையாடியதை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு அவரது தந்தை ராஜீவ் காந்தி எப்படி "உள்ளே உடைந்து போனார்" என்பதையும் வெளிப்படுத்தினார்.
“அப்போது என் தந்தை வங்காளத்தில் இருந்தார், அவர் டெல்லிக்கு திரும்பி வந்தார். மருத்துவமனை இருட்டாகவும், பச்சையாகவும், அழுக்காகவும் இருந்தது. நான் உள்ளே நுழையும் போது வெளியே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. என் வாழ்க்கையில் என் தந்தை அழுவதை நான் முதன்முறையாகப் பார்த்தேன்... அன்று மாலை, என் தந்தை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுவதைப் பார்த்தேன். என்னைப் போலவே அவரும் உள்ளுக்குள் உடைந்திருப்பதை அறிந்தேன். என்னைப் போலவே அவரும் தனக்கு முன்னால் இருப்பதைக் கண்டு பயப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். பின்னர், அந்த இருண்ட இரவில் அவர் பேசுகையில், நான் ஒரு சிறிய நம்பிக்கையை உணர்ந்தேன்... பலரும் அந்த நம்பிக்கையை பார்த்திருப்பதை அடுத்த நாள் உணர்ந்தேன். இன்று நான் திரும்பிப் பார்க்கையில்... இருளில் இருந்த அந்த சிறிய நம்பிக்கைக் கதிர்தான் இந்தியாவை இன்றைய நிலைக்கு மாற்ற உதவியது என்பதை என்னால் பார்க்க முடிகிறது” என்று ராகுல் காந்தி கூறினார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், “1984 இல், நான் தோட்டத்தில் இருந்தேன். நான் பியாந்த் சிங்கைச் சந்தித்தேன், என் பாட்டி எங்கே தூங்குகிறார், அவருக்குப் போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டார். யாரேனும் என் மீது கையெறி குண்டு வீசினால் எப்படி படுப்பது என்று சொன்னார்... நான் என் பாட்டியின் ரத்தத்தைப் பார்த்தேன். அவருடைய கொலையாளிகளான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரின் இரத்தத்தையும் நான் பார்த்தேன்… மிக நெருக்கமான ஒருவரை இழந்ததன் வலி எனக்கு புரிகிறது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்களைச் சந்தித்திருந்தால், கோபத்தில் உங்களைக் கொன்றிருப்பேன் என்று கூறியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். "கோபம் வேண்டுமென்றே மக்களுக்குள் செலுத்தப்படுவதால் யார் வேண்டுமானாலும் கோபப்படலாம். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக அதைச் செய்கிறார்கள்… அந்த கோபத்தைத் தூண்டுவதற்கு ஒரு நிமிடம் ஆகும், ஆனால் அது குறைய பல ஆண்டுகள் ஆகும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
2014-ம் ஆண்டில், அப்போதைய டைம்ஸ் நவ் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் தொலைக்காட்சி நேர்காணலின் போது கலவரம் தொடர்பான கேள்விகளை ராகுல் காந்தி எதிர்கொண்டார். சீக்கியர்களை நாட்டிலேயே கடுமையான உழைப்பாளிகள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார், அவர்கள் 1977 இல் தனது பாட்டிக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார், மேலும் தனது பாட்டியின் கொலைக்குப் பிறகு தான் உணர்ந்த கோபத்தை இனி சுமக்கவில்லை என்று மீண்டும் கூறினார்.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “முதலில் நான் கலவரத்தில் ஈடுபடவில்லை. நான் அதில் ஒரு பகுதியாகக் கூட இருந்ததில்லை," என்று கூறினார். அவர் தனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்பாரா என்று கேட்டபோது, “எல்லா கலவரங்களும் கொடூரமான நிகழ்வுகள் என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக, நான் காங்கிரஸ் கட்சியில் செயல்பாட்டில் இல்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.
கலவரம் குறித்து ராகுல் காந்தி (மற்றும் காங்கிரஸ்) மன்னிப்பு கேட்கவில்லை என ஊடகங்களால் இது விரைவாகக் காட்டப்பட்டது.
2017 ஆம் ஆண்டு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த உரையாடலின் போது கலவரம் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. வன்முறையைக் கண்டித்த ராகுல் காந்தி, “வன்முறையில் ஈடுபடும் எவருக்கும் எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நீதிக்கான அவர்களின் தேடலில் நான் 100% அவர்களுடன் இருக்கிறேன்... மேலும் என்னால் ஏதாவது செய்ய முடிந்தால், அதைச் செய்யும் முதல் நபர் நானே,” என்று கூறினார்.
ஆனால் 2018 ஆம் ஆண்டில், லண்டனில் அரசியல்வாதிகளுடனான உரையாடலின் போது, 1984 இல் சீக்கியர்களின் படுகொலையில் காங்கிரஸுக்கு தொடர்பு இல்லை என்று ராகுல் காந்தி மீண்டும் ஒரு சர்ச்சையைத் தூண்டினார். பின்னர் அதே பயணத்தின் போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்காக மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டதை நினைவுகூர்ந்து ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை நுணுக்கமாக வெளிப்படுத்தினார்.
"டாக்டர் மன்மோகன் சிங் பேசும்போது, அவர் நம் அனைவருக்காகவும் பேசினார்... நான் வன்முறையால் பாதிக்கப்பட்டவன், அது எப்படி இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்," என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஒரு உரையாடலின் போது ராகுல் காந்தி கூறினார்.
“....நான் நேசித்தவர்கள் கொல்லப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். என் தந்தையைக் கொன்றவர் கொல்லப்படுவதையும் பார்த்திருக்கிறேன். மேலும் யாழ்ப்பாணக் கடற்கரையில் திரு பிரபாகரன் (விடுதலைப் புலிகளின் தலைவர்) படுத்திருப்பதைக் கண்டபோதும், அவர் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்தபோதும்... என் தந்தையை அவருடைய இடத்தில் பார்த்தததால் நான் அவர்களுக்காக வருந்தினேன் என்று என்னால் சொல்ல முடியும்,” என்று ராகுல் காந்தி கூறினார். "எனவே, நீங்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளும்போது, அது உங்கள் மீது முற்றிலும் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியில், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபைக் கடந்தபோது பொற்கோவிலுக்குச் சென்றார். அப்போது, 1984 கலவரம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சீக்கிய சமூகம் நாட்டின் முதுகெலும்பின் ஒரு பகுதி என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.
கலவரம் குறித்து குறிப்பிடுகையில், நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங்கின் அறிக்கையை ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டார், மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகக் கூறினார். ”முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதைச் செய்துள்ளார். மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கூறியதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன்” என்று ராகுல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.