Rahul Gandhi’s interview with Kamal Haasan Tamil News: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து நடை பயணம் தற்போது டெல்லியை அடைந்தது.
இப்பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்தகட்ட பயணம் தொடக்கங்குகிறது. இதனிடையே, ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைக்கான நடைபயணத்தில் கலந்துகொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் பேசிய வீடியோ ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, சீனாவுடனான தேசத்தின் எல்லைப் பிரச்சனைக்கும், இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியது பின்வருமாறு:-
"இந்த 21 ஆம் நூற்றாண்டில் நமது பாதுகாப்பு அத்தனை சிறப்பானதாக இல்லை. எனவே, பாதுகாப்பு பற்றி நமக்கு ஒரு உலகப் பார்வை வேண்டும். அங்கு தான் நமது அரசாங்கம் தப்புக் கணக்கு போட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். எல்லையில் நடப்பதைப் பற்றி நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். சீனா நமது எல்லையில் 2000 கி.மீட்டர்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், நாம் அதைப்பற்றி பேசவில்லை. நமது பிரதமரும் எதுவும் கூறவில்லை. அவர்கள் நம் எல்லையை ஆக்கிரமித்து விட்டதாக ராணுவம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பிரதமர் கூறியிருக்கிறார். இது சீனாவுக்கு மிகத் தெளிவான ஒரு செய்தியைக் கூறுகிறது. 'நாம் என்ன செய்தாலும் இந்தியா பதிலடி கொடுக்காது' என அவர்கள் நினைப்பார்கள். அவர்களுடன் நம் ராணுவம் நடத்தும் பேச்சுவார்த்தையில், 'உங்கள் பிரதமரே இதை மறுத்திருக்கிறாரே, பின்னர் எதற்கு பேச்சு வார்த்தை' என கேட்கிறனர். இது இந்தியாவின் பேச்சு வார்த்தையை குழைக்கும் விதமாக அமைகிறது இல்லையா!
இது பிரச்சனையின் ஒரு பகுதி. மற்றொரு பகுதி என்னவென்றால், பிரச்சனை எப்படியெல்லாம் மாறுகிறது என்பது தான். முன்பெல்லாம் நீங்கள் எல்லையில் மட்டும் சண்டையிட்டீர்கள். ஆனால் இப்போது எல்லா இடங்களிலும் சண்டையிடுகிறீர்கள். மின் நிலையங்களை மூடுவதன் மூலமோ அல்லது ரயில் அமைப்புகளை மூடுவதன் மூலமோ நீங்கள் போராடுகிறீர்கள். எனவே, 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உள்நாட்டு ஒற்றுமை தான். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதி இருக்க வேண்டும். நாட்டிற்கு ஒரு தொலைநோக்கு பார்வை இருத்தல் வேண்டும்.
பலவீனமான பொருளாதாரத்திற்கும் தொலைநோக்கு பார்வை இல்லாத குழப்பமான தேசத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது. சீனாவுடனான தேசத்தின் எல்லைப் பிரச்சனைகள், ‘இந்தியாவில் உள்நாட்டில் நடப்பதுடன்’ இணைக்கப்பட்டுள்ளது. நாம் உள்நாட்டு பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என அவர்களுக்கு தெரியும். உள்நாட்டில் அமைதியின்மை நிலவுவதால் அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
உக்ரைனில் நடப்பது இந்தப் பிரச்சனையின் மறுப்பக்கம். அடிப்படையில் ரஷ்யர்கள் உக்ரைனில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான். 'மேற்கத்திய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்கிறார்கள். நீங்கள் இதைத் தொடர்ந்து செய்தால் நாங்கள் உங்கள் நாட்டையே மாற்றி அமைத்து விடுவோம். இந்தியாவுக்கும் இதே விஷயம் தான் நடக்கிறது. 'நீங்கள் செய்துவதில் கவனமாக இருங்கள்' என்று சீனர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், 'நாங்கள் உங்கள் நாட்டையே மாற்றி அமைத்து விடுவோம்' என்கிறார்கள். நாங்கள் லடாக்கிலும், அருணாச்சல பிரதேசத்திலும் நுழைவோம் என்கிறார்கள்.
உற்பத்தி துறை என்று வரும் போது, பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் போட்டி போட முடியாது. ஆனால், இந்தியாவால் சீனாவுடன் போட்டியிட முடியும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடம் அதற்கான மக்கள் தொகை உள்ளது. நம்மிடம் மக்கள் உள்ளனர். சீனாவுடன் போட்டி போட என்ன தேவை? இளைஞர்கள், பெருவாரியான மக்கள், நன்றாக படித்த மக்கள் என அனைவருமே உள்ளனர்.
மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால், இது சரச்சக்கைக்குரிய கருத்தாக இருக்கலாம். அவர்களிடம் தேவைக்கு அதிகமாக வளம் இருக்கிறது. ஆனால், நம் மக்களுக்கு போராட்டத்தின் வலி என்றால் என்னவென்று தெரியும். எனவே, இந்தியா உலகின் உற்பத்தியாளராக மாறுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பை நான் காண்கிறேன்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.