அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்று மீண்டும் அவருக்கு எம்.பி பதவியை இன்று வழங்கியுள்ளது. மக்களவை செயலகம் இன்று (ஆகஸ்ட் 7) அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். மக்களவை செயலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) மக்களவை செயலகம் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை திரும்ப பெற்று அவருக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்கியுள்ளது. முன்னதாக ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்யும் போது காட்டிய வேகத்தை மத்திய பா.ஜ.க அரசு திரும்ப பெறும் நேரத்தில் காட்டவில்லை என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். நாடாளுமன்றத்தில் ராகுலைப் பார்க்க பா.ஜ.க பயப்படுகிறதா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
மக்களவை ஒத்திவைப்புக்கு பின் இன்று மதியம் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் ராகுல் நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். ராகுலுக்கு எதிர்க்கட்சி, இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“