லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அடைந்துள்ள படுதோல்விக்கு, கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட எதிர்மறை பிரசாரமே காரணம் என கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்ட துவங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் வெற்றி பெற உள்ளது. லோக்சபாவில், மூன்று இலக்க இடங்களைக் கூட பெற முடியாமல் போனது மட்டுமல்லாது, இரண்டாவது முறையாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கும், அந்தஸ்து இல்லாத கட்சியாக, காங்கிரஸ், பரிதாபமாக நிற்கிறது.
ராகுல் காந்தி, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியை, காவலாளியே திருடன் ( chowkidar chor hai) என்று விமர்சித்தது மக்களிடையே ராகுல் மீது வெறுப்புணர்வையே வரவைத்தது. அதேநேரம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்திய புலவாமா மற்றும் பாலாகோட் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தை, சரியாக கட்டமைத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அதை வாக்குகளாக மாற்றக்கூடிய வித்தை, ராகுல் காந்திக்கு இன்னும் தெரியவில்லை என்று கட்சியின் முக்கிய தலைவர்களே ராகுல் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.
போட்டுத்தாக்கும் பெரிய தலைகள் : இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ( பெயர் போடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் )கூறியதாவது, ராகுல் காந்தி தலைமையில் ,காங்கிரஸ் கட்சி செயல்படுவது மிகவும் கடினமாக விஷயம். அவரது குடும்பம் சொல்வது மட்டுமே அரசியல் என்று ராகுல் இன்றளவும் நம்பிவருகிறார். அது தவறான செயல்பாடு. நான் இந்த குடும்பத்தை சேர்ந்தவன். நான் தலைவர் ஆவேன். அதற்கு பின்னர் எனது குடும்பத்தினர் தான் தலைவர்கள் ஆவர். கட்சியினர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக உள்ளது. இப்போதிருக்கும் இளைய தலைமுறையினர் இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
பிரதமர் மோடியை, திருடன் என்று அழைப்பது கட்சிக்கு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் என்று நானும், கட்சியின் மூத்த தலைவர்களும் ராகுலை எச்சரித்தோம். ஆனால், அவர் அதை காதில் வாங்கவே இல்லை. ராகுலின் இந்த பேச்சை, மக்கள் உண்மையிலலேயே ரசிக்கவில்லை. ராகுல் இந்த போக்கை தொடர்ந்து செய்துவந்ததால், மக்களுக்கு சலிப்பே ஏற்பட்டு விட்டது என்று அவர் கூறினார்.
லோக்சபாவில், மொத்த உறுப்பினர்களில், குறைந்தது, 10 சதவீத உறுப்பினர்களை பெற்ற கட்சிக்கு தான், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். மொத்தம், 543 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், குறைந்தது, 55 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தாலும், காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.
இந்த தேர்தலிலும், காங்கிரஸ், 52 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த முறையும், அந்த கட்சிக்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது என்றே கருதப்படுகிறது.ஆனாலும், 'மத்திய அரசு மனது வைத்தால், லோக்சபாவில் இரண்டாவது பெரிய கட்சிக்கு, போதிய உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சி பதவியை வழங்கலாம்' என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.