பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லி வழியாக ராகுல் காந்தி அணிவகுத்துச் செல்லும் போது, டெல்லி காவல்துறை பாதுகாப்பு அரணை பராமரிக்க தவறிவிட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
பாரத் ஜோடோ யாத்திரைக்கான ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காங்கிரஸ் கவலை தெரிவித்த ஒரு நாள் கழித்து, அரசு அதிகாரிகள், வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது என்று வியாழக்கிழமை கூறினர்.
“பாதுகாப்பு பெறுபவர் வருகிறபோது, வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில காவல்துறை/பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சி.ஆர்.பி.எஃப்-ஆல் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டலாம். அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் மாநில அரசுகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பெறுபவர் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மேம்பட்ட பாதுகாப்பு வளையம் (ஏஎஸ்எல்) மேற்கொள்ளப்படுகிறது,” என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வட்டாரம் தெரிவித்துள்ளது.
“டிசம்பர் 24, 2022 அன்று பாரத் ஜோடோ நடை பயணம் டெல்லியில் நுழைவதற்கு முன், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் உள்ளடக்கிய ஏ.எஸ்.எல் 22.12.022-ல் நடத்தப்பட்டது. அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு, போதுமான அளவு பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பெறுபவர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் போது, பாதுகாப்பு பெறுபவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், ராகுல் காந்தியின் தரப்பில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவது கவனிக்கப்பட்டு, இந்த உண்மை அவருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.
“உதாரணமாக, 2020 முதல் 113 மீறல்கள் கவனிக்கப்பட்டு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாரத் ஜோடோ யாத்திரை டெல்லி நடந்தபோது, பாதுகாப்பு பெறுபவர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியுள்ளார். மேலும், சி.ஆர்.பி.பி.எஃப் இந்த விஷயத்தை தனியாக கவனத்துக்கு எடுத்துச் என்றது” என்று சி.ஆர்.பி.எஃப் வட்டாரம் கூறியது.
பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லி வழியாக ராகுல் காந்தி அணிவகுத்துச் செல்லும் போது, டெல்லி போலீசார் பாதுகாப்பு அரண் அமைக்கத் தவறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், “ராகுல் காந்தி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் அனைவரின் பாதுகாப்பையும் தலைவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
“பாரத் ஜோடோ யாத்திரை 24 டிசம்பர் 2022 அன்று டெல்லிக்குள் நுழைந்தபோது, பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு பல சந்தர்ப்பங்களில் சமரசம் செய்யப்பட்டது. மேலும், பெருகி வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்காமல் டெல்லி காவல்துறை பதுகாப்பு அளிப்பதில் முற்றிலும் தோல்வியடைந்தது.” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்லும் யாத்திரையில் பங்கேற்றவர்களும் பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டியிருந்தது. அதே சமயம் டெல்லி போலீசார் வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, “இசட் பிளஸ் பாதுகாப்பை பெறும் ராகுல் காந்தி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கே.சி. வேணுகோபால் கடிதத்தில் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.