ராகுல் காந்தியின் சமூக நீதி கருத்து; கட்சி பொறுப்புகளில் சாதியை சமநிலைப்படுத்தும் காங்கிரஸ்; ஓ.பி.சி.,களுக்கு முக்கியத்துவம்

11 புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களுக்கு பொதுச் செயலாளர்கள் அல்லது பொறுப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர், ஐந்து பேர் ஓ.பி.சி முகங்கள், தலா ஒருவர் எஸ்.சி, எஸ்.டி மற்றும் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மூன்று உயர் சாதித் தலைவர்கள்

author-image
WebDesk
New Update
rahul gandhi constitution

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Asad Rehman

Advertisment

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மறுசீரமைப்பு, நாட்டின் நிறுவனங்கள் மற்றும் அதிகார அமைப்புகளில் பட்டியல் சாதிகள் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) மற்றும் சிறுபான்மையினரை சேர்ப்பதற்கான கட்சியின் உயர்மட்ட தலைவர் ராகுல் காந்தியின் சமூக நீதி சுருதியின் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் (LoP) ராகுல், நாட்டின் நிறுவனங்கள் மற்றும் வளங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வெறும் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், அந்த சமூகங்களின் "பங்கேற்பு மற்றும் கட்டுப்பாடு" வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி, அரசியலமைப்பின் நகலை கையில் எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார்.

Advertisment
Advertisements

காங்கிரஸ் மறுசீரமைப்பில் இரண்டு மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர்கள் மற்றும் ஒன்பது மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் புதிய நியமனங்களைக் கண்டனர், இதற்கு முன்னர் இந்த பதவிகளை வகித்த ஆறு பொறுப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று நடந்த கூட்டத்தில், கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) கட்சியில் சீர்திருத்தங்களுக்கு பச்சை சமிக்ஞை கொடுத்தது. முன்மொழியப்பட்ட கட்சி மறுசீரமைப்பு, காங்கிரஸின் தலைமைப் பதவிகளில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் "சமமான பங்கேற்பை" உறுதி செய்யும் என்று கட்சி உள்வட்டாரங்கள் தெரிவித்தனர்.

வெவ்வேறு மாநிலங்களின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட 11 புதிய நிர்வாகிகளில், ஐந்து பேர் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தலித், ஒருவர் முஸ்லீம், ஒருவர் பழங்குடியினர், மூன்று பேர் உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், பஞ்சாப் மாநிலத்திற்குப் பொறுப்பான பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், பூபேஷ் பாகேல் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர். ஒரு முஸ்லீம் முகமும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சையத் நசீர் ஹுசைன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு பொறுப்பான பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களின் ஒன்பது பொறுப்பாளர்களில் ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான சப்தகிரி சங்கர் உலகா மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பி.சி தலைவரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவருமான அஜய் குமார் லல்லு ஒடிசாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே ஹரிபிரசாத், ஹரியானா பொறுப்பாளர், ஹரிஷ் சவுத்ரி, மத்தியப் பிரதேச பொறுப்பாளர், மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரும் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கிரிஷ் சோடங்கர் கோவாவைச் சேர்ந்த ஓ.பி.சி பண்டாரி குழுவைச் சேர்ந்தவர், ஹரிஷ் சவுத்ரி ராஜஸ்தானின் பார்மரைச் சேர்ந்த ஓ.பி.சி தலைவர்.

தெலங்கானாவின் பொறுப்பாளராக இருக்கும் மீனாட்சி நடராஜன், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியைச் சேர்ந்த பிராமணர். மீனாட்சி நடராஜன் 2009 இல் மண்ட்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் அதிகாரி கே.ராஜு (ஜார்க்கண்ட் பொறுப்பாளர்) ஒரு தலித் தலைவர், கிருஷ்ணா அல்லவாரு (பீகார் பொறுப்பாளர்) ஒரு உயர் சாதி முகம்.

மேலவையில் மகாராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்யசபா உறுப்பினர் ரஜனி அசோக்ராவ் பாட்டீல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நெருக்கமாக இருந்த மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்.

காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலக்கப்படும் 6 பொறுப்பாளர்களில் உயர் சாதியினர் மற்றும் ஓ.பி.சி.,களில் இருந்து தலா மூன்று பேர் அடங்குவர்.

ராகுல் காந்தியின் முக்கிய குழுவில் கே.ராஜு, கிருஷ்ணா அல்லவாரு மற்றும் மீனாட்சி நடராஜன் ஆகியோர் அங்கம் வகித்துள்ளனர். இந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் கட்சி விவகாரங்களைக் கையாளும் முக்கியமான பணி கிருஷ்ணா அல்லவாருவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நியமனங்களில், ஒடிசாவில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பக்த சரண் தாஸ் (தலித்) மற்றும் மகாராஷ்டிரா பிரிவு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ ஹர்ஷ்வர்தன் சப்கல் (ஓ.பி.சி) ஆகியோரையும் கார்கே நியமித்தார்.

கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, கடந்த 10-15 ஆண்டுகளில் எஸ்.சி மற்றும் ஓ.பி.சி.,க்களுக்கு காங்கிரஸ் போதுமான அளவு செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டார். தனது பாட்டி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கீழ் இருந்த தாழ்த்தப்பட்ட பிரிவினரின் "நம்பிக்கையை" பழம்பெரும் கட்சியால் காப்பாற்ற முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கமில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

தலித் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் உரையாற்றிய அதே கூட்டத்தில், கட்சி "உள் புரட்சியைக் கொண்டுவர வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறினார். "காங்கிரஸில் சமீபத்திய நியமனங்கள், கட்சிக்கான ராகுலின் சாலை வரைபடத்துடன் ஒத்திசைகின்றன" என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த முதல் கட்சி மறுசீரமைப்பில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு காங்கிரஸ் 60 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது. அப்போதைய நியமனங்களில், 75 புதிய செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது புதிதாக நியமிக்கப்பட்டவர்களுடனான சந்திப்பின் போது, “கட்சியின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: கட்சிக்குள் நடக்கும் நியமனங்கள் அதன் சித்தாந்தத்தை பிரதிபலிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட குழுக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பு பற்றி ராகுல் காந்தி பேசுகிறார் என்றால், முதலில் கட்சிக்குள் இருப்பதையும், அது அமைப்பு மறுசீரமைப்பில் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். உயர்சாதிக் கட்சி என்ற பிம்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமானால், அதன் நியமனங்கள் மற்றும் செயல்பாடுகளிலும் அது பிரதிபலிக்க வேண்டும்.

சமீப மாதங்களில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைகள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியத்தையும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அதிகாரமளித்தலையும் மையமாகக் கொண்டிருந்தன, சாதிவாரி கணக்கெடுப்பை "சமூகத்திற்கான எக்ஸ்ரே" என்று ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.

இருப்பினும், ஜாதி குறித்த ராகுலின் சுருதியை பல மாநில தலைவர்கள் எதிரொலிக்காதது குறித்து சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “சாதி குறித்த ராகுல் காந்தியின் பார்வையைப் போல அதே நிலைப்பாட்டை எடுக்காத பல தலைவர்கள் மாநிலங்களில் உள்ளனர். கட்சி தனது செய்தியை கடைசி நபருக்கும் எடுத்துச் செல்ல உதவும் தலைவர்கள் மாநிலங்களில் இருக்க வேண்டும். சமூகத்தின் சாதி அமைப்பை பிரதிபலிக்கும் நியமனங்கள் அந்த திசையில் ஒரு படியாகும்,” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

Rahul Gandhi Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: