கர்நாடக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராகுல் காந்தியின் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது, இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து அடுத்த சில மாதங்களில் தான் இமயமலைக்கு ஆன்மீக பயணம் போகவிருப்பதாக ராகுல் அறிவித்தார்.
தற்போது கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களை தரிசிக்கும் பொருட்டு பயணத்தினை ராகுல் தொடங்கி விட்டார், அவர்தம் பாதுகாப்பு கருதி பயண திட்டம் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் இருந்து தப்பியதற்கு வேண்டுதல் பரிகாரம் என்பதை தாண்டி இந்த பயணம் அரசியல் முக்கியத்துவமும் பெறுகின்றது.பொதுவாக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மத நம்பிக்கையை அவ்வளவு வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இந்த ஆண்டு நடந்த குஜராத் தேர்தல்களின் போது ராகுல் கோவில்களுக்கு வெளிப்படையாக போய் வர ஆரம்பித்தார், ஒரு நேரத்தில் தனது பூணூலை காட்டி தனது இந்து அடையாளத்தினை வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.பாஜக முன் எடுக்கிற இந்துத்துவ அரசியலுக்கு எதிரான செயலாகவே ராகுலின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
தனக்கு மென் இந்துத்துவா போன்ற விஷயங்கள் எதிலும் ஆர்வம் இல்லை எனவும் ராகுல் கூறி உள்ளார், பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் விதமான விஷயங்கள் எதையும் தான் முன் எடுக்கவில்லை எனவும் அவர் மூத்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்தது கவனிக்கத்தக்கது.
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது அங்கே பிரபலமாக உள்ள பல்வேறு மடங்களுக்கும் சென்று அதன் பீடாதிபதிகளை ராகுல் சந்தித்தார். குஜராத் தேர்தலில் ராகுல் முன் எடுத்த ஆலய வழிபாடுகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் காங்கிரசின் வாக்கு சதவீதத்தினை உயர்த்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு ராகுலின் மென் இந்துத்துவா உத்தி ஒரு காரணம் என்ற கோணமும் முன் வைக்கப்படுகிறது.
சுமார் பத்து நாட்கள் கைலாஷ். மானசரோவர் உள்ளிட்ட இமயமலை பயணத்தை முடித்து வந்த உடன் ராகுல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் உத்திகளை வடிவமைக்க ஆரம்பிப்பார்.
2018 ம் ஆண்டின் இறுதியில் வருகின்ற இந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான அரைஇறுதியாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் பெரும்பான்மையான இந்துக்களை இந்துத்துவா என்ற ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிற வலதுசாரி சித்தாந்தங்களுக்கான எதிர் வினையாகவே ராகுலின் சமீபத்திய கோவில் விஜயங்கள் பார்க்கப்படுகின்றன.
தன்னை ஒரு சிவ பக்தனாக காட்டிக் கொள்கின்ற ராகுலின் பக்தி, ஆன்மீக களத்தினை தாண்டி அரசியல் முக்கியத்துவமும் உடைய ஒன்றாகவே கருதப்படுகிறது.