/indian-express-tamil/media/media_files/2025/11/02/rahul-jumps-into-muddy-pond-2025-11-02-21-40-19.jpg)
பீகாரில் மீன்பிடி குளத்தில் குதித்த ராகுல் காந்தி: மீனவர்களுடன் கலந்துரையாடல்
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் உள்ள சேற்று குளம் ஒன்றில் குதித்து, அங்கு கூடியிருந்த மீனவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். மேலும், தான் எப்போதும் அவர்களுக்குத் துணையாக இருப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பெகுசராய் மாவட்டத்தில் நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான முகேஷ் சஹானி உடன் அவர் அருகிலுள்ள குளம் ஒன்றுக்குச் சென்றார். இருவரும் படகு ஒன்றில் குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அங்கு, தனது மேலாடை மற்றும் கால்சட்டையைக் களைந்து பனியன் மற்றும் உள்ளாடையுடன் இருந்த சஹானி, குளத்தில் வலையை வீசினார். அவரது மீன்பிடித் திறமை ராகுல் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது.
பாலிவுட்டில் செட் டிசைனராகப் பணியாற்றிய இவர், தற்போது தனது சமூகமான மீனவ சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதனால், தன்னை 'மல்லாவின் மகன்' (மீனவரின் மகன்) என்று அழைத்துக்கொள்வதை விரும்பும் சஹானி, வலையில் மீன்கள் சிக்கிய உற்சாகத்தில் மார்பளவு தண்ணீரில் குளத்திற்குள் குதித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தனது வழக்கமான வெள்ளை டி-ஷர்ட் மற்றும் கார்கோ பேண்ட் அணிந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சஹானியைப் பின்தொடர்ந்து குளத்தில் இறங்கினார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் 'ராகுல் காந்தி ஜிந்தாபாத்' (ராகுல் காந்தி வாழ்க) என்று உற்சாகமாகக் கோஷமிட்டனர். அந்த இடத்தில் ஏராளமான மீனவர்களும் கூடியிருந்தனர். அவர்களில் சிலர், தலைவர்களுடன் மார்பளவு தண்ணீரில் இணைந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் கன்னையா குமாரும் அங்கு இருந்தார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சியை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ராகுல் காந்தி மீனவர்களிடம் "அவர்களது தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்கள்" குறித்துக் கலந்துரையாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீன் வளர்ப்பிற்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடித் தடைக்காலமான "3 மாத காலத்திற்கு" ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் ரூ. 5,000 நிதியுதவி போன்ற 'இந்தியா' கூட்டணியின் வாக்குறுதிகளையும் அந்த சமூக ஊடகப் பதிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கட்சியின் மாநிலப் பிரிவும் இந்த வீடியோ காட்சியைப் பகிர்ந்து, "இது உண்மையான குளம்" என்று மறைமுகமாகத் தாக்கி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளது. டெல்லியில் சத் பூஜையையொட்டி யமுனை ஆற்றில் பிரதமர் மோடி நீராடத் திட்டமிட்டிருந்ததை இது குறிப்பதாக இருந்தது. ஆனால், நீராடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், "சுத்தமான, குழாய் நீர் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய குட்டை" என்பது தெரிய வந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு ஆத்திரமடைந்த பா.ஜ.க, பீகாரின் மிகவும் பிரபலமான பண்டிகையை அவர் "அவமதித்துவிட்டதாக" குற்றம்சாட்டி எதிர்வினையாற்றி வருகிறது. இதற்கிடையில், ராகுல் காந்தி பெகுசராய் கிராம மக்கள் பலரின் மனதைக் கவர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் "எங்களுடன் கைகுலுக்கியது" குறித்து கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாக உள்ளூர் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு சேனல் வெளியிட்ட செய்தியில், ராகுல் காந்தி பின்னர் உடை மாற்றுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றதாகவும், அங்கு வசித்த பெண்கள், "அவர் வெளியே இருந்த கைப்பம்பில் முகம் கழுவினார், அருகிலிருந்த பாழடைந்த கழிப்பறையைப் பயன்படுத்தினார், எதற்கும் அவர் தயக்கம் காட்டவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ககாரியாவில் நடந்த அடுத்த பேரணியிலும் காங்கிரஸ் தலைவர் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
"சிறிது நேரத்திற்கு முன்பு, நான் சஹானி ஜியுடன் மீன் பிடிக்கச் சென்றேன். ஏன் தெரியுமா? ஏனென்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தங்கள் நெற்றி வியர்வையால் உழைத்து வாழும் இதுபோன்ற அனைத்து மக்களும், ராகுல் காந்தி தங்களுடன் இருக்கிறார் என்பதை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அந்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us