scorecardresearch

‘பா.ஜ.க-வுக்கு உதவும் மம்தா’: ராகுல் கருத்துக்கு டி.எம்.சி கடும் எதிர்ப்பு

மேகாலயா தேர்தலில் பா.ஜ.கவுக்கு திரிணாமுல் உதவுகிறது என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு அக்கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘பா.ஜ.க-வுக்கு உதவும் மம்தா’: ராகுல் கருத்துக்கு டி.எம்.சி கடும் எதிர்ப்பு

மேகாலயாவின் ஷில்லாங்கில் நேற்று (புதன்கிழமை) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) குறித்து விமர்சனம் செய்தார். இதைத்தொடர்ந்து திரிணாமுல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேகாலயா சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸிற்கு வாக்குச் சேகரித்து பேசிய மூத்த தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டத்தில் ராகுல் பேசுகையில், “டி.எம்.சி வரலாறு உங்களுக்குத் தெரியும். வங்காளத்தில் நடக்கும் வன்முறை உங்களுக்குத் தெரியும். மோசடிகள் குறித்து உங்களுக்குத் தெரியும். அவர்களின் பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். கோவாவிற்கு வந்த அவர்கள், கோவாவில் பெரும் தொகையை செலவு செய்தனர். அதன் நோக்கம் பா.ஜ.க.வுக்கு உதவி செய்வதாக இருந்தது. மேகாலயாவிலும் இதுதான் நடக்கிறது. பா.ஜ.கவை பலப்படுத்தப்பட்டு வெற்றி பெறச் செய்வதே டிஎம்சியின் திட்டமாக உள்ளது” என்றார்.

ராகுலின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த மேற்கு வங்க முதல்வரின் மருமகனும், டிஎம்சி உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, “காங்கிரஸ் பா.ஜ,கவை எதிர்க்கத் தவறிவிட்டது. பொருத்தமின்மை, திறமையின்மை & பாதுகாப்பின்மை அவர்களை மயக்க நிலையில் வைத்துள்ளது. எங்களைத் தாக்குவதற்குப் பதிலாக அரசியலை ராகுல் திரும்பி பார்க்க வேண்டும். நமது வளர்ச்சி பணத்தில் இல்லை, மக்களின் அன்பு தான். 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் 92 இடங்களில் போட்டியிட்டபோது. இது பாஜகவுக்கு உதவும் யோசனையா? டி.எம்.சி மீதான குற்றச்சாட்டு இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த 45 சட்டமன்றத் தேர்தல்களில் 40-இல் தோல்வியடைந்த ஒரு கட்சியிலிருந்து வந்தது” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து டி.எம்.சி ராஜ்யசபா எம்பி டெரெக் ஓ பிரையன் கூறுகையில், கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது குறித்து குறிப்பிட்டார். “மார்ச் 2022 இல் நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் கோவா மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 11 எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்தனர். ஒரு வருடத்திற்குள், அவர்களில் 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். யார் யாருக்கு உதவுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சிக்கு, கோவாவில் பெரும் தோல்வியைத் தொடர்ந்து, அதன் தேசிய விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேகாலயா தேர்தலில் செயல்படுத்தி வருகிறது. நவம்பர் 2021 இல், முகுல் சங்மா உட்பட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் கட்சிக்கு மாறி, அதை சட்டமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாற்றினர். இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கருத்து கூறினார். அதில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மற்ற எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதாகவும், அவர் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahuls comments have tmc seething