Railway board plans to increase the passenger and freight fares : பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே யாதவ் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இதனை தெரிவித்தார். ரயில்வே அமைச்சகம் விரைவில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடும் என்று அவர் கூறியிருந்தார்.
சில ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டிய காரணத்தால் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்தார். கட்டணங்களை குறைந்த அளவில் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதில் பங்கேற்ற நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த், பயணிகள் ரயில் கட்டண மானியம் இந்தியாவில் மிக அதிகம் என்று தெரிவித்தார். மேலும் சரக்குகள் 70% சாலைகள் வழியே செல்வதால் இதில் ஒரு சமநிலை தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். 2014-2015 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் கி.மீ. 4 காசுகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil