பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பேசுகையில், சென்னையில் இருந்து மகாபலிபுரம், மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் மற்றும் நகரி - திண்டிவனம் - புதுச்சேரியை இணைக்கும் ரயில்வே பாதையின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், புதுச்சேரி வழியாக திண்டிவனம் மற்றும் கடலூரை இணைக்கும் தனித் திட்டத்தை ரயில்வே பரிசீலித்து வருகிறதா? அப்படியானால், அதற்கான திட்டம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "சென்னையிலிருந்து கடலூருக்கு மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாக இணைப்பதற்கான ஒரு புதிய ரயில் பாதை 179.28 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான தற்போதைய திட்ட மதிப்பீடு ரூபாய். 2670 கோடியாகும்.
இந்த திட்டத்திற்கு 2023 - 24 நிதியாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசானது ரயில்பாதையில் சில மாற்றங்களையும் புதுச்சேரி கடலூர் மார்க்கத்தில் இருவழி பாதையாகவும் கேட்டுள்ளது. புதுச்சேரி அரசின் கோரிக்கையின் அடிப்படையில் திருத்தம் செய்யவும், இரட்டை ரயில்பாதை அமைக்கவும் செலவை மாநில அரசே ஏற்குமாறு கோரப்பட்டது. ஆனால் இத்திட்டங்களுக்கான செலவை புதுச்சேரி அரசு ஏற்க முடியாத நிலையில் உள்ளதாக 16.05.2018 அன்று தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், ரயில்வே பாதை அமைக்க இறுதி கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
திண்டிவனம் - நகரி 185 கி.மீ நீளம் கொண்ட புதிய பாதை திட்டத்திற்கு ரூ.3631 கோடி செலவு ஏற்படும். மார்ச், 2023 வரை ரூ.697 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வாலாஜா ரோடு முதல்- ராணிப்பேட்டை இடையேயான 6 கி.மீ.க்கு பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் ரூ.200 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் - புதுச்சேரி இடையே (44 கி.மீ.) புதிய பாதைக்கான கணக்கெடுப்பு 2015-16ல் நடத்தப்பட்டது. குறைந்த போக்குவரத்து கணிப்பு காரணமாக திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. சென்னை கடலூர் இணைப்பு திட்டத்தில், புதுச்சேரி கடலூர் திட்டம் இணைத்து செய்யப்படும்." என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.