வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சின் முன்மாதிரியை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பி.இ.எம்.எல் பெங்களூரு வளாகத்தில் வெளியிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: All you need to know about Vande Bharat sleeper train as Railway Minister Ashwini Vaishnaw unveils prototype
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) பெங்களூர் வளாகத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சின் முன்மாதிரியை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
“வந்தே பாரத் சேர் கார்களுக்குப் பிறகு, நாங்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் கார்களில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதன் உற்பத்தி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ரயில் இன்று பி.இ.எம்.எல் வளாகத்திலிருந்து சோதனை மற்றும் சோதனை ஓட்டத்துக்காக புறப்படும்,” என்று வைஷ்ணவ் கூறினார்.
“நாட்டிற்கு இது ஒரு வரலாற்று தருணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டி இப்போது இந்திய ரயில்வேயின் தடங்களில் இயங்கத் தயாராக உள்ளது, இது நம் மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் சிறந்த தரமான வசதிகளையும் வழங்குகிறது. பி.இ.எம்.எல்-ன் தலைமை மற்றும் பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை சாத்தியமாக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.
டிக்கெட் விலை குறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது ராஜ்தானி கட்டணத்திற்கு இணையாக இருக்கும் என்றார். முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் என்பது 800 முதல் 1,200 கிமீ தூரம் வரை நீண்ட தூரம் ஒரே இரவில் பயணம் செய்யக் கூடியது. இந்த ரயிலில் 16 பெட்டிகள் - 11 ஏசி மூன்றடுக்கு, 4 ஏசி இரண்டு அடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு - மொத்தம் 823 பெர்த்கள் இருக்கும்.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Express Photo)
ரயில்வே குறிப்பிட்டுள்ளபடி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஐரோப்பிய தரத்திற்கு இணையாக பயணிகளுக்கு அனுபவத்தை வழங்குகிறது. அதிகபட்ச செயல்பாட்டு வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். இதில் 1வது ஏசி காருக்கான ஹாட் வாட்டர் ஷவர், பொது அறிவிப்பு மற்றும் காட்சி தகவல் அமைப்பு, பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட துர்நாற்றம் இல்லாத கழிப்பறைகள், தானியங்கி வெளிப்புற பயணிகள் கதவுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெர்த்கள் மற்றும் கழிப்பறைகள் மற்றும் யு.எஸ்.டி சார்ஜிங் வசதியுடன் ஒருங்கிணைந்த ரீடிங் லைட்ஸ் ஆகியவை இருக்கும்.
பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க, ரயில் பெட்டியானது உண்மையான துருப்பிடிக்காத எஃகு கட்டுமானத்தைக் கொண்டுள்ளது மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விபத்து பஃபர்கள் மற்றும் கப்ளர்கள் போன்ற மேம்பட்ட விபத்து-தடுப்பு கூறுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் தொகுப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மற்றும் கூறுகளும் மிக உயர்ந்த தீ பாதுகாப்பு தரங்களை கடைபிடிக்கின்றன, ரயில்வேயின் படி கடுமையான EN45545 HL3 தர தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை பி.இ.எல்.எம்-ன் பெங்களூரு வசதிக்கு அருகில் 9.2 ஏக்கர் பரப்பளவில் ஹேங்கர் வசதிக்காக அடிக்கல் நாட்டினார். இது நிலையான மற்றும் பரந்த அளவிலான ரோலிங் ஸ்டாக் ஏற்றுமதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் பி.இ.எம்.எல்-ன் உலகளாவிய வரம்பை விரிவுபடுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.